டெக்
கல்விக்கடன் வழங்கல்: வங்கி மேலாளர்களுக்கு தொழில்நுட்ப வசதி கேட்டு சு.வெங்கடேசன் கடிதம்
கல்விக்கடன் வழங்கல்: வங்கி மேலாளர்களுக்கு தொழில்நுட்ப வசதி கேட்டு சு.வெங்கடேசன் கடிதம்
கல்விக்கடன் வழங்கல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள, அத்திட்டத்தை வழிநடத்தும் வங்கி மேலாளர்களுக்கு தொழில் நுட்ப வசதி வழங்கிட வலியுறுத்தி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “மதுரை மாவட்டத்தில், இந்த ஆண்டுக்கான கல்விக்கடன் வழங்குவது பற்றிய ஆலோசனைக் கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது. அதில் இவ்வாண்டுக்கான இலக்கு நிச்சயித்து செயல்பட திட்டமிடப்பட்டது. அப்பொழுது எனது கவனத்துக்கு வந்த முக்கிய பிரச்சனையில் ஒன்று, மாவட்டத்தில் வழிநடத்தும் வங்கி மேலாளருக்கு கல்விக்கடன் வழங்கலை கண்காணிக்கும் வசதி இல்லை என்பது.
இது உண்மையில் பெரும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது. இந்த அடிப்படை தகவல் கூட வழி நடத்தும் வங்கி மேலாளரால் அணுக முடியாத நிலை இருந்தால் பின்னர் எப்படி மாவட்டங்களில் கல்விக்கடன் திட்டத்தை கண்காணிக்கவும், முன்னெடுக்கவும் முடியும்? இது மதுரைக்கான பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியாவுக்குமான பிரச்சனையாக உள்ளது. எனவே இது பற்றி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி: காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் மதுரை: முதல்வருக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம்
தனது அக்கடிதத்தில் அவர் வலியுறுத்தியிருப்பதாக கூறப்படுபவை: "கல்விக் கடன் வழங்குதல் தொடர்பாக வித்யாலட்சுமி தளத்தில் ‘ஒவ்வொரு வங்கியும், ஒவ்வொரு வங்கிக்கிளையும் எவ்வளவு கடன் விண்ணப்பங்களை பெறுகின்றன மற்றும் கடன் வழங்குகின்றன’ என்பதை கண்காணிக்க உதவும் தொழில்நுட்ப வசதி, அத்திட்டத்தை வழிநடத்தும் மாவட்ட வங்கி மேலாளர்களுக்கு ’தனியாக உட் செல்லும்’ (Log in) வகையில் இல்லை. இதை வழங்குவது கல்விக் கடன் வழங்கலை விரைவுபடுத்த உதவும். மேலும் வித்யாலட்சுமி திட்டத்தின் சிறப்பான செயலாக்கத்தையும் உறுதி செய்யும். எனவே அத்தகைய தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்" எனக்கோரியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய தொழில் நுட்ப வசதி தரப்படாததால் வழிநடத்தும் வங்கி மேலாளர்களின் பணி மிகச் சிரமமானதாக உள்ளது. ஒவ்வொரு வங்கியையும் அவர்கள் தொடர்பு கொண்டு விவரங்கள் பெறுவது, கண்காணிப்பது என்பது கால விரயத்தை உருவாக்குவதோடு, மாவட்ட நிர்வாகத்தால் எளிதில் புள்ளி விவரங்களைப் பெற முடியாத ஒன்றாகவும் மாறியுள்ளது. எனவே மாவட்ட முதன்மை வங்கி மேலாளருக்கு இத்தொழில் நுட்ப வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்” என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார். இதை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.