சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவைகள் மூலம் பல்வேறு நாட்டு அரசுகளே தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.
இது தொடர்பாக ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரேசில், ஜெர்மனி, கனடா, தைவான் உள்ளிட்ட 9 நாடுகளில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் ரஷ்யாவில் இருந்து செயல்படும் 45 சதவீத ஆக்டிவ் ட்விட்டர் கணக்குகள் இயந்திரங்களால் செயல்படுத்தப்படுபவை என்று தெரியவந்துள்ளது. மேலும், தைவானில் அதிபர் டிசாய் லிங் வென்-க்கு எதிராக செயல்படும் சமூக வலைதள கணக்குகள் சீன ஆதரவுடன் தவறான தகவல்களைப் பரப்பவே பயன்படுத்தப்படுகின்றன என்பதும் தெரியவந்துள்ளது.
ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் வலைதளங்களில் அல்காரிதங்களைப் பயன்படுத்தி வெறுப்பு அரசியல், தவறான தகவல்கள், பொய்யான தகவல்கள் போன்றவைகளே அதிகம் பரப்பப்படுத்தப்படுவதாக ஆக்ஸ்ஃபோர்டு இணையதள படிப்புகள் துறையின் பேராசிரியர் பிலிப் ஹாவர்ட் கூறுகிறார். போலியான சமூக வலைதள கணக்குகள் மூலம் மக்களின் எண்ணங்களை மாற்றும் வகையிலான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் பரப்புரைகளை மேற்கொள்ளும் முக்கிய இடமாக ட்விட்டர் மாறியதாகவும் அந்த ஆய்வு கூறியிருக்கிறது. இதன்மூலம் பெரிய அளவிலான ஆதரவு இருப்பதாக ஒரு பிம்பத்தினை ட்ரம்ப் ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.