விடைபெறும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் - மைக்ரோசாப்ட் அறிவிப்பு
இணையதளத்தில் நாம் எல்லோரும் உலாவ உதவி செய்து வருவது வெப் பிரவுசர்கள் தான். அந்த வகையில் கடந்த 1995 வாக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம் செய்த பிரவுசர் தான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். அறிமுகமான காலம் முதலே கடந்த 2004 வரை தனிக்காட்டு ராஜாவாக இணைய உலகில் சாம்ராஜ்யம் செய்து வந்தது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் தான். அப்போதிருந்த சந்தை பயன்பாட்டில் 95 சதவிகிதம் பயனர்கள் இந்த பிரவுசரை தான் பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் பயர்பாக்ஸ் மற்றும் கூகுள் குரோம் பிரவுசர் மாதிரியான பிரவுசர்களின் வரவினால் தனது இருப்பிடத்தை மெல்ல மெல்ல இழக்க தொடங்கியது இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர். பின்னாளில் இதன் ஆமை வேக இயக்கம் குறித்து மீம்ஸ் போட்டு கலாய்க்க தொடங்கினர் நெட்டிசன்கள்.
இதையடுத்து வரும் 2022, ஜூன் 15க்கு பிறகு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் சில விண்டோஸ் 10 வெர்ஷன் கொண்ட கணினிகளில் இயங்காது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம். இதற்கு மாற்றாக மைக்ரோசாப்ட் எட்ஜ் பிரவுசர் இருக்கும் எனவும் மைக்ரோசாப்ட் விளக்கம் கொடுத்துள்ளது.