ஆளில்லாமல் இயங்கும் டிராக்டர்: மஹேந்திராவின் புதிய படைப்பு
விவசாயத்திற்கு பயன்படும் ஆளில்லாமல் இயங்கக்கூடிய டிராக்டரை மஹேந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் பெருவாரியான பகுதிகளில் விவசாயத்திற்கு டிராக்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் விவசாயிகள் டிராக்டரை தாங்களே அல்லது வெளியாட்களை வைத்து இயக்க வேண்டிய நிலையுள்ளது. இந்நிலையில் ஆளில்லாமல் எளிதில் இயங்கக்கூடிய டிராக்டர் ஒன்றை மஹேந்திரா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இந்த டிராக்டரை தொலைவிலிருந்தே ரிமோட் மூலமாக இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் டிராக்டர் செல்லும் போது குறுக்கே எதாவது பொருட்களோ அல்லது மனிதர்களோ வந்தால் அதற்கேற்ப திறனறிந்து நின்று விடும் தொழில்நுட்பமும் இதில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நிலப்பரப்பை பதிவு செய்துவிட்டால், முழுநிலத்தையும் மிச்சமின்றி முறையாக உழுதுவிடும் என்பதால் இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என மஹேந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை நிலத்தை உழுவது, மருந்து தெளிப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தலாம் என்றும், இந்த டிராக்டர் அடுத்த ஆண்டு முதல் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.