விண்ணில் இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்..!

விண்ணில் இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்..!
விண்ணில் இன்று பாய்கிறது பிஎஸ்எல்வி சி-42 ராக்கெட்..!

விண்வெளித் துறையில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, இன்று இரவு பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இங்கிலாந்து நாட்டின் இரு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தவுள்ளது.

விண்வெளிக்கு அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்தபடி பறக்கும் ராக்கெட் தொழில்நுட்பத்திலும் இஸ்ரோ அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. தற்போது பிஎஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை வணிக ரீதியில் பயன்படுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக இங்கிலாந்து நாட்டின் நோவாசார் மற்றும் எஸ் ஒன் ஃபோர் ஆகிய இரு செயற்கைக்கோள்களை சுமந்தபடி இன்று இரவு 10:08 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாயவுள்ளது பிஎஸ்எல்வி. இதற்கான 32 மணிநேர 37 நிமிட கவுண்ட் டவுன் நேற்று பிற்பகல் 1.08 மணிக்கு துவங்கியது.

காப்புக் காடுகளின் பரப்பை கண்காணித்தல், பேரிடர் கால கண்காணிப்பு, கடல்வழி போக்குவரத்து ஆகியவற்றின் பயன்பாட்டுக்காக 445 கிலோ எடையில் நோவாசார் என்ற செயற்கைக்கோளை இங்கிலாந்து தயாரித்துள்ளது. இதே போல் சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக எஸ் ஒன் ஃபோர் என்ற செயற்கைக்கோளும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளும் 444 கிலோ எடை கொண்டது.

இவ்விரு செயற்கைக்கோளையும் சுமந்தபடி செல்லும் இந்தியாவின் பிஎஸ்எல்வி சி 42 ராக்கெட், அதற்காக நிர்ணயிக்கப்பட்ட வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தவுள்ளது. இதுவரை 48 இந்திய செயற்கைக்கோள்களும், 209 வெளிநாட்டு செயற்கைகோள்களும் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

பிஎஸ்எல்வி ராக்கெட் பூமியில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவு வரை சுமார் ஆயிரத்து 750 கிலோ எடை வரை சுமந்து செல்லும் திறன் படைத்தது. மூன்று வகைகளில் உள்ள பிஎஸ்எல்வி தனது முதல் பயணத்தை கடந்த 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி தொடங்கியது. அன்று முதல் இன்று வரை பிஎஸ்எல்வி ராக்கெட்டின் தொழில்நுட்பம் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com