“இந்தியாவின் இண்டர்நெட் வேகம் 100 எம்பிபிஎஸ் ஆக அதிகரிக்கும்” - இஸ்ரோ தலைவர்
அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் இன்டர்நெட்டின் வேகம் ஒரு விநாடிக்கு 100 எம்பிபிஎஸ் அதிகரிக்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான்கு புதிய தொலைத் தொடர்பு செயற்கைக்கோள்கள் மூலம் இந்த வேகம் சாத்தியமாகும் என்றார். கடந்த ஆண்டு ஜி சாட் 19 ஏவப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், வரும் நவம்பர் மாதம் ஜி சாட் 29ம், டிசம்பர் மாதம் பிரெஞ்ச் கயானாவிலிருந்து ஜி சாட் 11ம் ஏவப்பட உள்ளதாகக் கூறினார். ஜி சாட் 20 அடுத்த ஆண்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட உள்ளதாகக் கூறிய சிவன், இதன் மூலம் நாட்டின் இன்டெர்நெட் வேகம், பெருமளவு அதிகரிக்கும் என்றார்.
குறிப்பாக கிராமப்புறம், நகர்ப்புறம் என்ற வித்தியாசம் இல்லாமல் போகும் என்றும் குறிப்பிட்டார். 50 கோடி உபயோகிப்பாளர்களுடன் உலகிலேயே இண்டெர்நெட் உபயோகத்தில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மொபைல் இண்டர்நெட் வேகத்தில் இந்தியா உலகில் 76ஆவது இடத்தில் உள்ளது. நாட்டின் தற்போதைய பிராட்பேண்ட் வேகம் நொடிக்கு 18.82 மெகா பைட்டாக உள்ளது. மொபைல் இண்டெர்நெட் வேகத்தில் உலகின் முதல் இடத்தில் நார்வே உள்ளது.