விண்வெளியில் தண்ணீர், எரிபொருள்... சாதனை படைத்த இஸ்ரோ குறித்து விஞ்ஞானி சொல்லும் சுவாரஸ்ய தகவல்!

"ISRO விஞ்ஞானிகளின் சோதனை நமக்கு வெற்றியை தந்துள்ளது. இந்த சோதனையில் 180வாட் மின்சாரம் கிடைத்ததாக இஸ்ரோ தகவல் வெளியிட்டு உள்ளது" - விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்
த.வி.வெங்கடேஸ்வரன்
த.வி.வெங்கடேஸ்வரன்PT

விண்ணில் மின்சாரம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது இஸ்ரோ. இது குறித்து விஞ்ஞானியும் முதுநிலை அறிவியலாளருமான த.வி.வெங்கடேஸ்வரன் (விகியான் பிரசார், டெல்லி) நம்முடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவற்றை பார்ப்போம்...

“ஜனவரி 1ஆம் தேதி PSLV-C58 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் விண்வெளியில் உள்ள கருந்துளைகள் முதலியவற்றை வெளியிடும் எக்ஸ்-ரே கதிர்கள் மூலம் ஆராய்ச்சி செய்யும் எக்போ சாட்டை விண்வெளியில் நிலை நிறுத்துவதுதான்.

PSLV-C58 பூமியிலிருந்து சுமார் 650 கிலோ மீட்டர் உயரத்தில் எக்போ சாட்டை விண்வெளியில் நிலைநிறுத்திய பின்னர், PSLV-C58 ராக்கெடின் மூன்றவது கட்ட ஏவூர்தி பூமியிலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் தாழ்வட்ட பாதைக்கு கொண்டு வரப்பட்டது.

பொதுவாக மூன்றாவது கட்ட எவூர்த்தி தன் பணியை முடித்த பின்னர் குப்பை போல விண்வெளியை சுற்றி வரும். ஆனால் அந்த மூன்றாம் கட்ட எவூர்தியை ஆய்வு தளமாக பயன்படுத்த இஸ்ரோ முயற்சி செய்தது. இதன் தொடர்ச்சியாக விண்வெளியில் எரிபொருள் ஆராய்சி என பல்வேறு ஆய்வுகளை எடுத்து சென்றது. அதில் ஒன்று பாலிமர் எலக்ட்ரோலைட் செல் சவ்வு (polymer electrolyte membrance fuel cell.) இந்த கலத்தின் ஒரு புறம் ஹைட்ரஜனும், மற்றொரு புறம் ஆக்ஸிஜன் வாயுவும் நிரப்பப்பட்டு, இதன் நடுவில் ஒரு ஜவ்வு ஒன்று இருக்கும்.

த.வி.வெங்கடேஸ்வரன்
“விண்வெளி ஆய்வு மையத்தை நிலவில் அமைப்போம்...” - மயில்சாமி அண்ணாதுரை

விண்வெளியில் ஹைட்ரஜன் வாயுவையும் ஆக்ஸிஜன் வாயுவையும் ஜவ்வு வழியாக இணைக்கும் பொழுது, அதிலிருந்து கழிவாக சுத்தமான நீர் உருவாகும். மேலும், இந்த ஜவ்வு வழியாக ஹைட்ரஜன் செல்லும் பொழுது மின்சுற்று உருவாகி அதிலிருந்து மின்சாரம் உருவாகும். ஆக ஹைட்ரஜன் ஆக்ஸிஜனைக் கொண்டு தண்ணீரையும், வெப்பத்தையும் சுலபமாக விண்வெளியில் நாம் பெறமுடியும் என்று இஸ்ரோ தனது சோதனையில் வெற்றி தரவுகளை பதிவு செய்துள்ளது. இந்த மின்கலம் விண்வெளியில் எப்படி வேலை செய்யும் என்பதை இந்த ஆய்வு மூலம் இஸ்ரோ சோதனை செய்து பார்த்துள்ளது.

புவியீர்ப்பு விசை தாக்கம் அற்ற நிலையில் விண்வெளியில் ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் இணைக்க இயலுமா? இது சாத்தியமா என்ற விஞ்ஞானிகளின் ஆராய்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது போல, ISRO விஞ்ஞானிகளின் சோதனை நமக்கு வெற்றியை தந்துள்ளது. இந்த சோதனையில் 180வாட் மின்சாரம் கிடைத்ததாக இஸ்ரோ தகவல் வெளியிட்டு உள்ளது.

இதன் மூலம் வரும் காலத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டிற்கு தேவையான எரிபொருளையும், மின்சாரத்தையும் விண்வெளியில் பெறமுடியும் என்ற ஒரு அசாத்திய நிகழ்வை இஸ்ரோ செய்துள்ளது” என்றார் த.வி.வெங்கடேஸ்வரன்.

மேலும், நிலவில் இருக்கும் பனிகட்டியிலிருந்து ஹைட்ரஜனையும் ஆக்ஸிஜனையும் பிரித்து, எரிபொருளாக பயன்படுத்தமுடியும் என்ற நம்பிக்கையை பெற்றிருப்பதாக விஞ்ஞானி முதுநிலை அறிவியலாளர் த.வி.வெங்கடேஸ்வரன் (விகியான் பிரசார், டெல்லி) தெரிவிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com