9 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் ! இஸ்ரோவின் பிளான்

9 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் ! இஸ்ரோவின் பிளான்
9 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் ! இஸ்ரோவின் பிளான்

அடுத்தடுத்த 9 மாதங்களில் 10 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். ஆந்திரம் மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எஃப் 08 ராக்கெட் வியாழக்கிழமை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு, ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இஸ்ரோவின் சக விஞ்ஞானிகளுடன் கே.சிவன் கூறியது 'ஜிஎஸ்எல்வி ராக்கெட்டின் செயல்பாட்டைக் கூடுதலாக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதாவது, ஏற்கெனவே உள்ள ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளைக் காட்டிலும், சிறப்பான செயல்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், ராக்கெட்டின் இரண்டாம் நிலையில் (திரஸ்ட் லெவல்) பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது ராக்கெட்டின் செயல்பாட்டை முன்பைவிட 6 சதவீதம் கூடுதலாக்கியுள்ளது. 


அதுபோல, இந்த ராக்கெட்டில் எலக்ட்ரோ இயந்திவியல் இயக்கவிசை கூடுதலாகச் சேர்க்கப்பட்டது. இந்த இயக்கவிசையானது, முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட லித்தியான் பேட்டரிகள் மூலம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இது மிகப் பெரிய சாதனையாகும். இந்த பேட்டரி தொழில்நுட்பத்தை, எலெக்டிரிக் வாகன (இ-வாகனம்) துறையிலும் பயன்படுத்துவது குறித்து இந்திய அரசு திட்டமிட்டு வருகிறது.  இப்போது விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள், ஏற்கெனவே அங்கு செயல்பாட்டில் இருக்கும் ஜிசாட்-6 செயற்கைக்கோளுடன் இணைந்து, இந்தியாவுக்கு பயனளிக்க உள்ளது. குறிப்பாக மேம்பட்ட தகவல் தொடர்பு, ஆன்ட்டனா மற்றும் சாட்டிலைட் தகவல் தொடர்புக்கு பெரிதும் பயனளிக்க உள்ளன. இந்த ஆண்டு இஸ்ரோவுக்கு மிகப்பெரிய சாதனைகளுக்கான ஆண்டாக உள்ளது. ஏனெனில் அடுத்த 9 மாதங்களில் 10 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. தகவல்தொடர்புக்கு, கடல் போக்குவரத்துக்கு, உயர் திறன் கொண்ட ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் என பல்வேறு துறைகளுக்கு உதவக் கூடிய வகையிலான செயற்கைக்கோள்கள் அடுத்தடுத்து அனுப்பப்பட உள்ளன' என்றார் சிவன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com