‘ஹவாய் மேட் 20 ப்ரோ’ வெளியீடு : 40 எம்பி கேமரா..
ஹாவாய் நிறுவனத்தின் ‘மேட் 20 ப்ரோ’ மாடல் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் வெளியாகியுள்ளது.
ஆப்பிள், சாம்சங், ஒன் ப்ளஸ் போன்ற முன்னணி நிறுவனங்களில் ஸ்மார்ட்போன்களுக்கு இணையாக தங்கள் நிறுவன ஸ்மார்ட்போன்களையும் வெளியிட வேண்டும் என்ற முனைப்பில் ஹவாய் நிறுவனம் புதிய போன்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ‘மேட் 20 ப்ரோ’ மாடல் ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.69,990 ஆகும். இது ஆண்ட்ராய்டு 9.0 பெய் இயங்குதளத்தில் செயல்படும். 6.39 இன்ச் அளவிலான முழு டச் ஸ்கிரீனுடன் வெளியாகியுள்ள இந்த போன் க்யூ.ஹெச்டி வசதி கொண்டது.
பல்வேறு புதிய தொழில்நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் என இரண்டு ரகங்கள் உள்ளன. அவற்றின் இண்டெர்நல் ஸ்டோரேஜ் முறையே 128 ஜிபி மற்றும் 256 ஜிபி வழங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு ரகங்களிலும் மைக்ரோ சிப் மூலமாக கூடுதலாக 256 ஜிபி ஸ்டோரேஜை அதிகரித்துக்கொள்ள இயலும். தற்போதைய காலகட்டத்தில் மக்கள் கேமரா வசதி சிறந்து விளங்கும் போனிற்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு ஏற்றவாறு ‘மேட் 20 ப்ரோ’ வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த போனின் பின்புறத்தில் 40 எம்பி (மெகா பிக்ஸல்) வொய்ட் ஆங்கிள் கேமரா, 20 எம்பி அல்ட்ரா வொய்ட் ஆங்கிள் கேமரா மற்றும் 8 எம்பி டெலிபோடோ லென்ஸ் கேமரா என மூன்று கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இரட்டை ஃப்ளாஷ் லைட்டுகளும் உள்ளன. முன்புறத்தில் 3டி இமோஜி இணைக்கப்பட்ட 24 எம்பி செல்ஃபி கேமரா இணைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கூடுதலான நேரம் செல்போன் செயல்படும் வகையில் 4,200 எம்.ஏ.எச் திறன் கொண்ட பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் உலகின் முதல் ஒயர்லெஸ் ரிவர்ஸ் சார்ஜ் வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.