ஹுவாய் ‘மய்மாங் 7’ - 4 கேமராக்களுடன் வெளிவரும் ஸ்மார்ட்போன்
ஹுவாய் மொபைல் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான ‘மய்மாங் 7’ மாடல் 4 கேமராக்களுடன் வெளிவரவுள்ளது.
ஸ்மார்ட்போன்களை பொருத்தவரையில் நாளுக்குநாள் புதிய தொழில்நுட்பங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதிதாத ஸ்மார்ட்போன் வாங்கும் ஒருவர், ஒரு மாதத்திற்குள் போனை விற்றுவிட்டு புதிய ஸ்மார்ட்போன் வாங்கலாமோ? என்று யோசிக்கும் அளவிற்கு, அடுத்த மாதத்தில் வெளியாகும் ஸ்மார்ட்போனின் தொழில்நுட்பம் உள்ளது. அந்த வகையில் ஹுவாய் நிறுவனம் தங்கள் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வரும் 15ஆம் தேதி சீனாவில் வெளியிடுகிறது. இந்த போனின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.25,300 இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. கறுப்பு, நீளம், தங்க நிறம் என மூன்று நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.
ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளத்துடன் வரும் இந்த போன், 6.3 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே கொண்டது. இந்த போன் கீழே விழுந்தால் டிஸ்ப்ளே உடையாமல் இருக்க, 2.5டி தடிமன் கொண்ட பாதுகாப்பு கண்ணாடி ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 ஜிபி ரேம் உடன், 64 ஜிபி இண்டெர்நல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கூடுதலாக மைக்ரோ சிப் பொருத்தி, 256 ஜிபி வரை மெமரியை அதிகரித்துக்கொள்ளலாம்.
இந்த ஸ்மார்ட்போனின் தனிச்சிறப்பு என்னவென்றால், இதன் கேமராதான். முன்புறம் இரண்டு, பின்புறம் இரண்டு என மொத்தம் 4 கேமராக்கள் இதில் உள்ளன. பின்புறத்தில் 20 எம்பி கேமராவுடன், 2 எம்பி துணைக்கேமரா உள்ளது. முன்புறத்தில் 24 எம்பி செல்ஃபி கேமராவுடன், 2 எம்பி துணைக்கேமரா இணைக்கப்பட்டுள்ளது. பின்புற கேமராவின் கீழேயே கைவிரல் ரேகை பரிசோதிக்கும் தொழில்நுட்பம் உள்ளது. மேலும் வேகமாக ஜார்ஜ் ஏற்றும் வகையில், 3750 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரியும் இதில் உள்ளது.