
நிலவின் மேற்பரப்பில், சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் தரை இறங்குவதற்கான Automatic landing sequence தொடங்கிய நேரத்தில், பெங்களூரில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து லேண்டரின் நகர்வுகளை கேமராக்கள் மற்றும் சென்சார் மூலம் விஞ்ஞானிகள் கண்காணித்தனர்.
31 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து ஒவ்வொரு கட்டமாக லேண்டர் இறங்கிய போது, அதன் ஒவ்வொரு கட்டங்களின் உயரத்தையும் வேகத்தையும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது 200 மீட்டரில் இருந்து 150 மீட்டருக்குள் வரும்போது லேண்டரில் உள்ள நிலை உணர் மற்றும் ஆபத்து தவிர்ப்பு கேமராக்கள், தரை இறங்க உள்ள இடத்தில் பள்ளமும் மேடும் உள்ள சமமற்ற பகுதியாக இருப்பதை கண்டறிந்தன. அந்த கணத்தில் கட்டளை மையத்தில் அமர்ந்திருந்த விஞ்ஞானிகள் முகத்தில் சற்று பதற்றம் தெரிந்தது. அப்போது சந்திரயான் லேண்டரில் பொருத்தப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு கணினி, கேமராக்கள் மூலம் பெறப்பட்ட கட்டளைகளை தானாக செயல்படுத்தியது.
அதன்படி ஏழு கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும்போதே தரையிறங்கும் பகுதியில் ஒரு சமமற்ற நிலையை உணர்ந்த செயற்கை நுண்ணறிவு 150 மீட்டர் உயரத்தில் அதை உறுதிப்படுத்தி தரையிறங்கும் பகுதியை கிடைமட்டமாக சற்று நகர்த்தியது. இதன்மூலம் அடுத்த சில வினாடிகளில் சந்திரயான் லேண்டர் பத்திரமாக தரையிறங்கியது. தரையிறங்கிய நிமிடத்தில்தான் இஸ்ரோ விஞ்ஞானிகளின் முகத்தில் மீண்டும் மலர்ச்சி ஏற்பட்டது.
சந்திரயான் 2 மென் தரையிறக்கத்தின் போது ஏற்பட்ட தவறுகளை நுட்பமாக எதிர்கொண்டு வெற்றி கண்டிருக்கிறது சந்திரயான் 3 லேண்டர். தவறுகளில் இருந்து பாடம் கற்பது போல, சந்திரயான் 2ல் பெற்ற பாடத்தை சந்திரயான் 3ல் சரி செய்திருக்கிறார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள்.