பெண் வழக்கறிஞரின் பிறந்தநாளை கொண்டாடும் கூகுள் டூடுள்!
இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் கார்னெலியா சோராப்ஜியின் 151வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் அவரின் புகைப்படத்தை வைத்து கூகுள் டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெண்கள் குறிப்பிட்ட தொழில்சார்ந்த மேற்படிப்புகளையே படிக்க வேண்டும் என்ற கொள்கையை தூக்கி எரிந்துவிட்டு நீதித்துறையில் முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெயரை பெற்று பல பெண்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் கார்னெலியா சோராப்ஜி. நவம்பர் 15, 1866 ஆம் ஆண்டு நாசிக் நகரில் பிறந்த இவர் தன் பெற்றோர்களின் கனவை நிறைவேற்றுவதற்காக சிறு வயதில் இருந்தே கடினமாக படித்தார். பின்பு பிரபலமான ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழத்தில் சட்டப்படிப்பு பயிலச் சென்றார். பல்லாயிரக்கணக்கான ஆண்கள் நிறைந்த பல்கலைக்கழகத்தில் தனியொரு பெண்ணாக நின்று 1894 ஆம் ஆண்டு அவர் சட்டக்கல்வியை படித்து முடித்தார். ஆனால் கார்னெலியாவின் உழைப்பிற்கு உடனடியாக அங்கீகாரம் கிடைக்கவில்லை 1922 ஆம் ஆண்டு முதலே ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெண்களுக்கு பட்டம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இருப்பினும் மனம் தளராத கார்னெலியா, பல்வேறு போராட்டங்களை தாண்டி மும்பை பல்கலைக்கழகத்தில் மீண்டும் சட்டப்பிரிவு படிப்பில் சேர்ந்து இளங்கலை பட்டம் பெற்று முதல் பெண் வழக்கறிஞர் என்ற பெயரை பெற்றார். அதன் பின்பு அவர், மும்பை, கொல்கத்தா நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றினார். புகழ்பெற்ற பல வழக்குகளில் வாதாடி வெற்றியும் கண்டுள்ளார். இத்தகைய பெருமைக்குரிய கார்னெலியா சோராப்ஜியின் 151வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக உலகின் மிகப்பெரிய தேடல் நிறுவனமாக கூகுள் தனது முகப்பு பக்கத்தில் கூகுள் டூடுள் ஒன்றை வெளியிட்டு அவரைப் பற்றி இன்றைய தலைமுறையினருக்கும் தெரிய வைத்துள்ளது.