கம்போடியாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், யூ-டியூப் வீடியோ பார்த்து விமானம் ஒன்றை உருவாக்கி அதில் பறந்து சாதனை படைத்துள்ளார்.
கம்போடியாவை சேர்ந்தவர் பாயென்லாங். கார் மெக்கானிக்கான இவர், இரவு நேரங்களில் யூ-டியூப் வீடியோக்களை பார்ப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். விமானங்கள் மீது அதீத ஆர்வம் கொண்ட அவர், விமான கட்டுமானம் தொடர்பான வீடியோக்களை பார்த்து அதன்படி விமானம் ஒன்றை தயாரிக்க ஆரம்பித்தார். பழுதடைந்த விமானத்தின் பாகங்களை வாங்கிய அவர், காரின் உதிரிபாகங்களை வைத்து ஒருவர் மட்டும் அமர்ந்து செல்லக்கூடிய விமானத்தை உருவாக்கினார். நூற்றுக்கணக்கான மக்களின் முன்னிலையில் அதனை இயக்கிய பாயென்லாங், சிறிது தூரம் அதில் பறந்தும் சாதனை படைத்தார்.
50மீட்டர் உயரம் வரை பறந்த அந்த விமானம் கடைசியில் தரையில் விழுந்து நொறுங்கியது. தன் முயற்சி தோல்வியடைந்தும் மனம் தளராத பாயென்லாங், வரும் ஜூலை மாதத்திற்குள் இந்த விமானத்தை சீர்செய்து தண்ணீர் மேல் பறந்து காட்டுவேன் என்று சவால் விடுத்து அதற்கான பணியில் தீவிரமாக இறங்கியுள்ளார். பாயென்லாங் பள்ளி படிப்பையே தாண்டாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

