கிட்ஸ் மெசேஞ்சரில் குறைபாடு: பேஸ்புக் மீது பெற்றோர்கள் குற்றச்சாட்டு
குழந்தைகளுக்கான கிட்ஸ் மெசேஞ்சரில் குறைபாடு உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்
சமூக வலைத்தளங்களில் பேஸ்புக் முக்கியமான ஊடகமாக உள்ளது. கோடிக் கணக்கானவர்கள் பேஸ்புக்கில் இயங்கி வருகின்றனர். பேஸ்புக்கில் தங்களுக்கு பிடித்தமான கருத்துகள், படங்கள், வீடியோக்களை பகிர்ந்து தங்களுடைய எண்ணங்களை பிரதிபலித்து வருகின்றனர். அதே போல் உலகில் வேறு எவருடனும் எளிதாக நட்பாகும் வசதி பேஸ்புக்கில் உண்டு. இதனால் பல பிரச்னைகளும் உண்டாகி வருகின்றன.
பெரியவர்களுக்கே பேஸ்புக் பல பிரச்னைகளை கொடுக்கிறது என்பதால் சிறுவர்கள் பேஸ்புக் பயன்படுத்துவது பேராபத்து எனக் கூறப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்ட பேஸ்புக், 2017ம் ஆண்டு, 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, சில பாதுகாப்பு அம்சங்களுடன் 'கிட்ஸ் மெசேஞ்சர்’ என்ற சாட் வசதியை அறிமுகம் செய்தது.
அதன்படி பெற்றோர்கள் அனுமதியுடன் தான் குழந்தைகள் பேஸ்புக்கில் வேறு யாருடனும் நண்பர்களாக முடியும் என்ற வசதி கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த பாதுகாப்பு அம்சத்தில் குறைபாடு உள்ளதாக பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கிட்ஸ் மெசேஞ்சரில் உள்ள குரூப் சாட் வசதியின் மூலம் அறிமுகம் இல்லாத நபர்களுடன் எளிதாக குழந்தைகள் நண்பராக முடிகிறது என்றும் இது பாதுகாப்பானது இல்லை என்றும் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்களின் அனுமதி இல்லாமலேயே குரூப் சாட்டில் பலருடன் குழந்தைகள் பேச வாய்ப்பு இருப்பதால் இது பாதுகாப்பற்று இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த குறைபாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள பேஸ்புக், ''புகார் வந்ததும், குறைபாடுகள் நீக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்படும்'' என்றும் தெரிவித்துள்ளது.