“90 ஆயிரம் வாட்ஸ்அப் குரூப்ஸ் மூலம் பரவும் போலிச் செய்திகள்” - சமூக ஊடக நிபுணர்

“90 ஆயிரம் வாட்ஸ்அப் குரூப்ஸ் மூலம் பரவும் போலிச் செய்திகள்” - சமூக ஊடக நிபுணர்
“90 ஆயிரம் வாட்ஸ்அப் குரூப்ஸ் மூலம் பரவும் போலிச் செய்திகள்” - சமூக ஊடக நிபுணர்

போலிச் செய்திகளை தடுக்க சமூக வலைத்தளங்கள் பல நடவடிக்கைகளை எடுத்தாலும் முழுவதுமாக தடுக்க முடியாமல் சற்று திணறி வருவதாகவே கூறப்படுகிறது. 

சமூக வலைத்தளங்களும் ஒரு ஊடகமாகவே செயல்படுகின்றன. ஆகவே அதன் மூலம் எந்தச் செய்தியும் நொடிப்பொழுதில் எல்லாரிடமும் போய்ச் சேர்கிறது. அதேபோல போலிச் செய்திகளும் எளிதில் மக்களிடத்தில் சென்றடைந்து விடுகிறது. இதனைத் தடுக்க அரசும், சமூக வலைத்தள நிறுவனங்களும் தொடர்ந்து முயற்சிகள் எடுத்துக்கொண்டு வருகின்றன.  

மக்களவைத் தேர்தல் நேரத்தில் போலி செய்திகள் வெளியாவதைத் தடுக்க சமூக வலைத்தளங்களை மத்திய அரசு அறிவுறுத்தியது. அதற்கு ஏற்ப சமூக வலைத்தள நிறுவனங்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது 3 கட்ட தேர்தல் மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 4 கட்டத் தேர்தல் மீதமுள்ளது. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள், போலிச் செய்திகளை தடுக்க சற்று திணறுவதாகவே கூறப்படுகிறது. போலிச் செய்திகளை தடுக்க கடுமையாக போராடி வருவதாவும் தகவல் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு கருத்து தெரிவித்துள்ள சமூக ஊடக நிபுணர் அனூப் மிஸ்ரா, ''பேஸ்புக் மெசேஞ்சர், வாட்ஸ் அப் மூலம் போலிச் செய்திகளும், தேர்தல் தொடர்பான தவறான செய்திகளும் பரவுகின்றன. பேஸ்புக்கில் வேறு பெயர்களில் பக்கங்களை நிர்வகித்து வரும் பலர் தேர்தல் காலங்களில் கட்சி சார்பு பக்கங்களாக பெயரை மாற்றிவிடுகிறார்கள். இதனை தடுக்க பேஸ்புக் நிறுவனம் பல முயற்சிகளை எடுத்தாலும் முழுமையாக தடுக்க முடியவில்லை. தற்போது வாட்ஸ் அப்பில் 90ஆயிரத்துக்கும் மேலான குரூப்களும், 200க்கும் அதிகமான போலி பக்கங்களும் தேர்தல் தகவல்களை பரப்ப பயன்பாட்டில் இருக்கின்றன'' என்று தெரிவித்துள்ளார்.

போலி பக்கங்கள் மூலம் அரசியல் கட்சிகள் குறித்து தகவறான தகவல்களை பரப்புவது, புள்ளி விவரங்களை மாற்றி வெளியிடுவது, போலி புகைப்படங்கள், போலி கருத்துக்கணிப்பு உள்ளிட்ட பல தகவல்கள் பரவுகின்றன. பேஸ்புக் சமீபத்தில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான தேவையற்ற தகவல்களை நீக்கி வருகிறது. 700க்கும் அதிகமான பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் ட்விட்டர் மற்றும் வாட்ஸ் அப் நிறுவனங்களும் போலிச் செய்திகளை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனாலும் போலிச் செய்திகளை சமூக வலைத்தளங்களால் முற்றிலும் தடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் மட்டும், ஏப்ரல் மாதத்தின் முதல் 20 நாளுக்குள் அரசியல் விளம்பரங்களுக்காக ரூ.7 கோடி ரூபாயை அரசியல் கட்சிகள் செலவிட்டுள்ள ன. பிப்ரவரி - மார்ச் மாதங்களில் மொத்தமாக ரூ.10 கோடி செலவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com