கேலரி புகைப்படங்களை திருடுகிறதா 'ஃபேஸ் ஆப்'?: எச்சரிக்கை விடுக்கும் வல்லுநர்கள்!
'ஃபேஸ் ஆப்' பயன்படுத்தினால் அனுமதி இல்லாமல் உங்கள் கேலரி புகைப்படங்களை அந்த செயலி எடுத்துக்கொள்ளும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக வலைதளங்களில் இரண்டு தினங்களாக, வயதான முகங்களே தென்படுகின்றன. ஃபேஸ் ஆப் மூலம் அனைவரும் தங்களின் முகங்களை வயதான தோற்றத்துக்கு மாற்றி ஷேர் செய்து வருகின்றனர். விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் ஃபேஸ் ஆப் மூலம் வயதாகியுள்ளனர்.
இந்நிலையில் ஃபேஸ் ஆப் பயன்படுத்துவது உங்கள் பிரைவசிக்கு பெரும் ஆபத்து என தகவல் வெளியாகியுள்ளது. ஃபேஸ் ஆப் பயன்படுத்தினால் உங்கள் கேலரியில் உள்ள புகைப்படங்களை அந்நிறுவனம் அபகரித்துக்கொள்ளும் என எச்சரிக்கை விடுக்கின்றனர். இது முதல்முறை இல்லை என்றும் 2017ம் ஆண்டே இதே மாதிரியான குற்றச்சாட்டு ஃபேஸ் ஆப் நிறுவனம் மீது வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ரஷ்ய நிறுவனம் தயாரித்த ஃபேஸ் ஆப் மூன்றாம் தர செயலிகள் மூலம் உங்களது புகைப்படங்களை திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் ஃபேஸ் ஆப் செயலி மீண்டு ட்ரெண்ட் ஆகியுள்ளது. ஆனாலும் அதன் மீதுள்ள குற்றச்சாட்டு அப்படியே உள்ளதாகவும் பலரும் எச்சரிக்கை விடுக்கின்றனர். உங்களது அனுமதி இல்லாமல் உங்கள் கேலரி புகைப்படங்களை ஃபேஸ் ஆப் எடுத்துக்கொள்ளும் என்ற குற்றச்சாட்டு பயனாளர்களுக்கு அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
பேஸ்புக் போன்ற அதிகமானோர் பயன்படுத்தும் செயலிகளே பிரைவசி விஷயத்தில் தோற்றுப்போன நிலையில் ஃபேஸ் ஆப்பை நம்புவது கடினம் தான் என வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.