நடுவானில் வெடித்து சிதறிய எலான் மஸ்க்கின் ராக்கெட் - காரணம் இதுதான்!

ஸ்டார்ஷிப் ராக்கெட்டானது நிலவு, செவ்வாய் கிரகம் மற்றும் அதற்கு அப்பால் விண்வெளி வீரர்களை அனுப்பும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டாகும்.
Starship
Starship@SpaceX, Twitter

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய ராக்கெட், சோதனையின் போது வெடித்துச் சிதறியது.

உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்குச் சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளி ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஸ்டார்ஷிப் எனப் பெயரிடப்பட்ட உலகின் மிகப்பெரிய ராக்கெட்டை உருவாக்கியது. இது நிலவு, செவ்வாய் கிரகம் மற்றும் அதற்கு அப்பால் விண்வெளி வீரர்களை அனுப்பும் நோக்கில் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட்டாகும்.

நேற்று ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட 3 நிமிடங்களிலேயே அதில் சிக்கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ராக்கெட் பிரிக்கும் நிலையில் சுழல ஆரம்பித்தவுடனே விண்ணில் வெடித்து சிதறியதை காணமுடிந்தது. சூப்பர் ஹெவி பூஸ்டரிலிருந்து ஸ்டார்ஷிப் பிரிந்திருக்க வேண்டும். ஆனால் ராக்கெட் தொடர்ந்து சுழன்று கொண்டிருக்கிறது என்று கமென்டேட்டர்கள் தெரிவித்தனர்.

டெக்சாஸிலுள்ள தனியார் விண்வெளி நிலையமான ஸ்டார்பேஸில் இருந்து சென்ட்ரல் நேரப்படி காலை 8:33 மணிக்கு (1333 ஜிஎம்டி) பிரமாண்டமான ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. முதல் நிலை ராக்கெட் பூஸ்டரில் இருந்து மூன்று நிமிடங்களில் பிரிந்து செல்லும்படி திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பிரிப்பு ஏற்படாமல் ராக்கெட் நடுவானில் வெடித்து சிதறியது.

”மிகவும் சிக்கலான மற்றும் பிரமாண்டமான ராக்கெட்டை சிரத்தை எடுத்து முதல்முறை விண்ணில் ஏவுகிறோம். இந்த ராக்கெட் மில்லியன் வழிகளில் தோல்வியில் முடியலாம்” என எலான் மஸ்க் தெரிவித்தார். தொடர்ந்து அடுத்த ராக்கெட் சோதனை இன்னும் சில மாதங்களில் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com