மனித மூளைக்குள் சிப் பொறுத்தும்முயற்சி! முதல் மனிதன் குணமடைந்துவருவதாக எலான் மஸ்க் ட்வீட் #Neuralink
கடந்த 2016-ம் ஆண்டு X (முன்னர் ட்விட்டர்) தலைமை நிர்வாகியான எலான் மஸ்க், ’நியூராலிங்க்’ எனப்படும் நரம்பியல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை உருவாக்கினார். இந்நிறுவனம் மனித எண்ணங்களை செயல்களாக மாற்றக்கூடிய மூளை மற்றும் கம்ப்யூட்டர் இரண்டிற்கும் இடைமுகமாக செயல்படக்கூடிய மைக்ரோ சிப்பை (Brain-Computer interface) உருவாக்குவதில் கவனம் செலுத்திவருகிறது.
அதாவது “இழந்த மூளை செயல்பாடுகளை மீட்டெடுத்து, அதன்மூலம் கம்பியூட்டர் போன்ற வெளிப்புற சாதனங்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தக்கூடிய BCI-ஐ உருவாக்குவதே” நியூராலிங்க் நிறுவனத்தின் குறிக்கோளாக இருந்துவருகிறது.
இதன் மூலம் உடல் பாகங்கள் செயலிழந்து போன மனிதர்கள் தங்கள் அறிவை வீணாக்காமல் பயன்பெறுவார்கள் எனவும், உடல் பருமன், மன இறுக்கம், மனச்சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மனிதர்களும் பயனடைவார்கள் எனவும் நியூராலிங்க் நம்புகிறது.
கடந்த 2020-ம் ஆண்டு இந்த ஆராய்ச்சியை விலங்குகள் மீது பயன்படுத்த அனுமதி வாங்கிய நீயூராலிங்க், ஒரு குரங்கின் மனதுடன் கணினி கர்சரைக் கட்டுப்படுத்தப் பயன்படும் BCI-ஐ பயன்படுத்தி வெற்றிகரமாக நிரூபித்துக்காட்டியது. அதைத்தொடர்ந்து மனிதர்களின் மூளைக்குள் மைக்ரோசிப் பொருத்தும் ஆராய்ச்சியை செய்துவந்த நிறுவனம், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் அதற்கான ஒப்புதலை பெற்றுள்ளதாக அறிவித்தது.
இனி பல ஸ்டீபன் ஹாக்கிங்கை உருவாக்கலாம்!
கடந்தாண்டு நியூராலிங்கின் அறிவிப்பை தொடர்ந்து அதன் நிறுவனரான எலான் மஸ்க், அடுத்தக்கட்ட பரிசோதனைக்காக நோயாளிகள் ஆட்சேர்ப்புக்கு அழைப்பு விடுத்தார்.
அப்போது பேசியிருந்த அவர், ”முதல் மனித நோயாளி விரைவில் நியூராலிங்க் கருவியைப் பெறுவார். இது இறுதியில் உடல் இயக்கத்தை முழுவதுமாக மீட்டெடுக்கும் திறனைக் கொண்டுள்ளது. இந்த பரிசோதனை ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு கிடைத்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்” என்று கூறியிருந்தார்.
தனது இளம்வயதிலேயே ALS எனப்படும் நரம்பியக்க நோயால் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் ஹாக்கிங், கை கால் இயக்கம் மற்றும் பேச்சு போன்றவற்றை இழந்த போதிலும் நவீன காலத்தின் தலைசிறந்த ஆராய்ச்சியாளராக போற்றப்பட்டார். கன்னத் தசைகளின் அசைவுகள் மூலம் கம்ப்யூட்டர் குரலில் மட்டுமே பேசி வந்த ஸ்டீபன், கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதியன்று மரணமடைந்தார்.
இந்நிலையில்தான், உடல் இயக்கங்கள் செயலிழந்துபோன மனிதனின் மூளைக்குள் மைக்ரோசிப் செலுத்தும் முயற்சி நடத்தப்பட்டதாகவும், தற்போது அந்த முதல் மனிதன் குணமடைந்து வருவதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
முதல் மனிதனின் மூளைக்குள் மைக்ரோசிப்பை நியூராலிங் பொறுத்தியது!
தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் எலான் மஸ்க், “முதல் மனிதன் நியூராலிங்கின் மைக்ரோசிப் உள்வைப்பைப் நேற்று பெற்றார். தற்போது அவர் நன்றாக குணமடைந்து வருகிறார். ஆராய்ச்சியின் ஆரம்ப முடிவுகள் நியூரான் ஸ்பைக் கண்டறிதலில் நம்பிக்கைக்குரிய வகையில் இருக்கின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் மற்றொரு ட்வீட்டில், “முதலாவதாக தயாரிக்கப்பட்டுள்ள மைக்ரோசிப் புராடக்ட் “டெலிபதி” என அழைக்கப்படும் என்றும், கைக்கால்களை இழந்தவர்கள் முதல் பயனாளர்களாக இருப்பார்கள் என்றும்” கூறியுள்ளார்.