புதனைவிட வெப்பமான ஒரு கிரகம்.... மூன்றில் ஒரு பங்கு வைரத்தால் நிறைந்துள்ளதா? வெளியான ஆச்சர்ய தகவல்!
விஞ்ஞானிகள் ஒரு சில தொலைநோக்கியின் உதவியால் கிரகங்களை கண்டுபிடிப்பதுடன், அதன் நிறம், அளவு, நட்சத்திரங்களுக்கு இடையேயான தூரம் ஆகியவற்றை கணக்கிட்டு அது எந்த வகை கோள்கள், அதன் அமைப்பு என்ன, அதனுள் இருக்கும் வாயுக்களின் வகை என்ன என்பதையெல்லாம் கணக்கிடுவது சில நேரங்களில் உண்மையில் நம்மையெல்லாம் பிரம்மிக்கத்தான் வைக்கிறது. அப்படியான பிரம்மிப்பான சில தகவல்கள்தான் இப்போதும் தெரியவந்துள்ளன. அது என்ன? விரிவாக பார்க்கலாம்...
விண்வெளியில் இதுவரை 5,743 கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் சிலவற்றிற்கு பெயரிட்டு அதனை ஆராய்ந்து வருகிறது நாசா. இப்படி கண்டுபிடிக்கப்பட்ட கோள்களை நமது சூரிய குடும்பத்துக் கோள்களுடன் ஒப்பீடு செய்து வருகின்றனர்.
அதன்படி
நெப்டியூன் போன்ற கிரக அமைப்பை ஒத்து 1,961 கிரகங்களும்,
வியாழன் கிரகத்தைப்போன்று வாயுக்கள் நிரம்பிய கிரகங்களாக (Gas giant) 184 கிரகங்களும்
பூமியை ஒத்த கிரகங்கள் சுமார் 1,730 (super earth) கிரகங்களும்
205 terrestrial (நிலப்பரப்பு) கிரகங்களும்
என்னவகையென்றே தெரியாத நிலையில் 7 கிரகங்களும்
வகைப்படுத்தப்பட்டுள்ளன.
55 Cancri e கிரகம்
இதில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து பெயரிட்ட 55 Cancri e என்ற ஒரு கிரகம், சூப்பர் எர்த் வகையைச் சார்ந்தது. பூமியிலிருந்து 41 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கிரகத்தை 2004-ல் விஞ்ஞானிகள் தொலை நோக்கியின் உதவியால் கண்டுபிடித்தனர். இது பூமியைவிட இரண்டு மடங்கு அதிகம் கொண்டது. மேலும் இது தன் சூரிய நட்சத்திரத்தை சுற்றி வர 2 நாட்களை எடுத்துக்கொள்கிறது.
இருப்பினும் இது தன் சூரிய நட்சத்திரத்துக்கு மிக அருகாமையில் இருப்பதால் மிகவும் வெப்பமான கிரகமாக கருதப்படுகிறது. அதனால் இக்கிரகத்தில் பகல் நேர வெப்பநிலையானது சுமார் 6,328 பாரன்ஹீட்டையும் தாண்டி இருக்கும் என்று கருதப்படுகிறது. நமது சூரிய குடும்பத்தில் இருக்கும் புதன் கிரகத்தைவிட அதீத வெப்பம் நிறைந்த ஒரு கிரகமாக இது இருக்குமாம்.
ஆரம்பத்தில் இந்த கிரகமானது ஹைட்ரஜன் ஹீலியம் நிறைந்ததாக இருக்கலாம் என்று ஆராச்சியாளர்கள் கருதினர். அதேநேரம் இதன் வளிமண்டலமானது மெல்லிய பாறையை கொண்டிருந்ததால், இந்த நட்சத்திரம் எரிமலைக் கடலால் மூடப்பட்டிருக்கும் என கருதப்பட்டது. அதாவது அதீத வெப்பநிலையால் இதில் இருக்கும் பாறைகள் உருகி அவை ஆவியாக வளி மண்டலத்தில் பரவி இருப்பதாக விஞ்ஞானிகள் கருதினர்.
இந்நிலையில், இதன் வளிமண்டலத்தில் கரி அமில வாயு மற்றும் கார்பன் மோனாக்சைடு அதிகரித்து காணப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
மேலும் ஒரு சாத்தியமாக இது முழுக்க கார்பன் நிறைந்த ஒரு திடமான கிரகம் என்றும் கூறப்படுகிறது. ஆகையால் இதில் மூன்றில் ஒரு பங்கு கார்பன் இருக்கலாம். அதுவும் இங்கு நிலவும் உயர் அழுத்தம் மற்றும் வெப்பநிலையால் இவற்றில் இருக்கும் கார்பன் வைரமாக இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
அப்படியென்றால் ஒரு கோளே வைரமாக இருக்குமா என்ற ஆச்சர்யம் இதனால் எழுந்துள்ளது. இதை உறுதிசெய்ய அடுத்தடுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.