வாட்ஸ் அப்பில் 'பார்த்தவுடன் மறையும் மெசேஜ்' வசதி - ஐபோனிலும் இப்போது அறிமுகம்

வாட்ஸ் அப்பில் 'பார்த்தவுடன் மறையும் மெசேஜ்' வசதி - ஐபோனிலும் இப்போது அறிமுகம்

வாட்ஸ் அப்பில் 'பார்த்தவுடன் மறையும் மெசேஜ்' வசதி - ஐபோனிலும் இப்போது அறிமுகம்

தொடர்ச்சியாக புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வரும் வாட்ஸ் அப், பயனாளிகள் பார்த்தவுடன் தானாக மறைந்து விடும் வகையில் மெசேஜ்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. ஏற்கெனவே ஆன்ட்ராய்டு பயனாளிகளுக்கு அறிமுகமான இந்த வசதி, தற்போது ஐபோன்களில் பீட்டா வடிவில் அறிமுகம் ஆகியுள்ளது.

மெசேஜிங் சேவையில் வாட்ஸ் அப் முன்னணியில் இருந்தாலும், பிரைவசியை காக்கும் அம்சங்கள் வாட்ஸ் அப்பில் குறைவு. இந்தக் குறையை ஈடு செய்யும் வகையில் வாட்ஸ் அப், பல புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து கொண்டிருக்கிறது. இந்த வரிசையில், தானாக மறையும் செய்திகள் வசதி அறிமுகம் ஆகியுள்ளது.

மெசேஜிங் சேவைகள் தகவல்களை அனுப்ப வழி செய்தாலும், இவற்றில் மிகவும் வித்தியாசமான சேவையாக, மறுமுனையில் பயனாளி பார்த்ததும் தானாக மெசேஜ் மறைந்து போகும் வசதியை 'ஸ்னாப் சாட்' சேவை முதலில் அறிமுகம் செய்தது. தானாக மறையும் மெசேஜ் காரணமாகவே 'ஸ்னாப் சாட்' பிரபலமானது. இதன் காரணமாகவே அந்த செயலி பயனாளிகளால் விரும்பப்படுகிறது.

பிரைவசி கவலை அதிகமானதும், ஸ்னாப் சாட்டில் தானாக மறையும் வசதி மேலும் பிரபலமானது. இதனையடுத்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளில் இந்த வசதி அறிமுகமானது. அண்மையில் டெலிகிராம் மெசேஜிங் சேவையில் கூட இத்தகைய வசதி அறிமுகமானது.

இந்நிலையில், வாட்ஸ் அப் சேவையிலும் தானாக மறையும் வசதி அறிமுகம் ஆகியுள்ளது. மெசேஜ்களுக்கு மட்டும் அல்லாமல், புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கும் இது பொருந்தும். இதன்படி, ஒரு தகவலை அனுப்பிய பின், அது பார்க்கப்பட்டவுடன் தானாக மறைந்துவிடும்.

இந்த வசதியை வாட்ஸ் அப் படிப்படியாக அறிமுகம் செய்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் ஆண்ட்ராய்டு போன்களில் முன்னோட்ட வசதியாக இது அறிமுகமானது. மறையும் மெசேஜ்கள் எனும் பெயரில் அறிமுகம் ஆன இந்த வசதியை, குறிப்பிட்ட பரிமாற்றத்திற்கு தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். எனினும், இதற்கு ஏழு நாட்கள் அவகாசம் இருந்தது.

இதன் அடுத்த கட்டமாக, ஒரு முறை பார்வை மெசேஜ் வசதியை அறிமுகம் செய்தது. இதன்படி, அனுப்பப்பட்ட தகவல் பார்க்கப்பட்ட உடன் அழிந்துவிடும் சாத்தியம் உண்டானது. இந்த வசதி பரவலாக அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெசேஜ் கட்டத்தில் வலது பக்கத்தில் உள்ள வட்டத்தில் இந்த வசதியை காணலாம். இதுவரை இந்த வட்டம் தோன்றவில்லை எனில் அடுத்த அப்டேட்டில் வரலாம். அல்லது, நாமே அப்டேட் செய்து கொள்ள வேண்டியிருக்கலாம்.

இந்நிலையில், ஐபோன்களுக்கும் இந்த மறையும் மெசேஜ் வசதி தற்போது முன்னோட்ட வடிவில் அறிமுகம் ஆகியுள்ளது. வீடியோக்களுக்கும் இது பொருந்தும்.

மறையும் மெசேஜ் வசதி பிரைவசி நோக்கில் ஏற்புடையது என்றாலும், மறுமுனையில் உள்ளவர்கள், மறையும் முன் செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு இருப்பதை மறந்து விடக்கூடாது.

இதனிடையே, ஐபோன் பயனாளிகளுக்கு அழைப்புகளுக்கான புதிய இடைமுகத்தையும் வாட்ஸ் அப் வெள்ளோட்டம் பார்த்து வருகிறது. பேசுவது யார் என்பதை அறிவதோடு, அழைப்பை பதிவு செய்வது உள்ளிட்ட விவரங்களை திரையிலேயே பார்க்கும் வகையில் புதிய இடைமுகம் அமைந்துள்ளது. குழு அழைப்புகளுக்குமான அம்சங்களும் உள்ளன.

- சைபர்சிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com