வீடுகளில் உள்ள டிவிக்கள் மற்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட ஆண்ட்ராய்டு செயலிகள் மூலம் ஒருவரது செயல்பாடுகளை உளவு பார்க்க முடியும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
சிஐஏ எனப்படும் அமெரிக்க உளவு அமைப்பு, ஹேக் செய்யப் பயன்படுத்தும் உத்திகள் தொடர்பாக விக்கிலீக்ஸ் இணையதளம் சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில், ஸ்மார்ட் டிவிக்கள், ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் மூலம் உளவு பார்ப்பது குறித்த தொழில்நுட்பங்கள் குறித்து சிஐஏ அமைப்பின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய எண்ட் டு எண்ட் என்கிரிப்ஷன் எனும் பாதுகாப்பு வசதி மூலம் தகவல்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது தவறு என்றே சிஐஏவின் தகவல்களை ஆய்வு செய்த தனியார் பாதுகாப்பு அமைப்பினர் எச்சரிக்கிறார்கள். சாம்சங் உள்ளிட்ட ஸ்மார்ட் டிவிக்களில் இணைய இணைப்பு இருப்பதுடன் குரல் பதிவு வசதியும் இருப்பதால், அந்த டிவிக்கள் ஆஃப் செய்யப்பட்டிருக்கும்போதும் உங்கள் நடவடிக்கைகளை வீடியோ மற்றும் ஆடியோ பதிவாக எடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஐபோன் பாதுகாப்பானதா?
இணைய உலகில் எதுவுமே பாதுகாப்பில்லை என்றுதான் கூற வேண்டும். சிஐஏவின் ஆவணங்களில் ஐபோனில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது. ஐபோனின் இயங்குதளமான ஐஓஎஸ் குறித்தும் சிஐஏ ஆவணங்களில் விவாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது விக்கிலீக்ஸ்.
இதுபோன்ற தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
* உங்கள் இ-மெயிலில் வரும் அட்டாச்மென்டுகள் பாதுகாப்பானது என்று உறுதியாகத் தெரிந்தால் மட்டுமே அதை கிளிக் செய்யுங்கள்.
* வங்கி கணக்குகள் போன்ற தனிப்ப்பட்ட தகவல்களை இணையம் வாயிலாகப் பகிர்வதைத் தவிர்த்து விடலாம்.
* லேப்டாப் கேமராக்களை பயன்படுத்தாத நேரங்களில் மூடி வைக்கலாம். இது பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்காலேயே பின்பற்றப்படும் முறை என்பது கூடுதல் தகவல்.