''நடிப்பது ஹீரோதான்; ஆனால் தெரிவது நீங்கள்'' - அசரடிக்கும் சீன செயலி!

''நடிப்பது ஹீரோதான்; ஆனால் தெரிவது நீங்கள்'' - அசரடிக்கும் சீன செயலி!
''நடிப்பது ஹீரோதான்; ஆனால் தெரிவது நீங்கள்'' - அசரடிக்கும் சீன செயலி!

தொழில்நுட்பங்களின் வளர்ச்சி நாளுக்கு நாள் மனிதர்களையே ஆச்சரியப்படுத்தி வருகிறது. இது எப்படி சாத்தியம் என்று வாய்பிளந்து ஆச்சரியப்படுத்தும் செயலிகள் எல்லாம் தினம் தோறும் தொழில் நுட்ப சந்தையில் இறங்கிக்கொண்டே இருக்கின்றன. இதில் பிரச்னை என்னவென்றால், தொழில்நுட்பங்களின் வளர்ச்சி பிரைவசி எனப்படும் சுய பாதுகாப்பை முழுவதுமாக கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. 

சமூக வலைத்தளங்கள், செயலிகள் என சராசரியாக இயங்கும் யாருமே இன்று ரகசியமானவர்கள் இல்லை என்பதையே டிஜிட்டல் உலகம் சொல்கிறது. நீங்கள் டிஜிட்டல் உலகத்துக்குள் நுழைந்துவிட்டால், உங்களை அது பின்தொடர தொடங்கிவிடுகிறது என்பதே உண்மை. இப்படி இருக்க, சீனாவில் பிரபலமடைந்த ஒரு செயலி தற்போது பாதுகாப்பு குறித்த கேள்வியை உலகெங்கும் கிளப்பியுள்ளது.

சாவ் எனக்கூறப்படும் இந்தச் செயலி மூலம் வீடியோக்களில் ஓடும் எதாவது ஒரு முகத்தை தேர்வு செய்து ஸ்கேன் செய்வதின் மூலம் பயனாளர்கள் தங்களது முகத்தை தேர்வு செய்த குறிப்பிட்ட தங்களின் முகத்துக்கு பதிலாக பொருத்தி விடலாம். அதாவது நாம் ஒரு சினிமா பார்க்கிறோம் என்றால், அந்த ஹீரோவுக்கு பதிலாக உங்களது முகத்தை பொருத்தி விடலாம். அதற்கு பின் ஹீரோ நடிக்கும் காட்சிகள் எல்லாம் உங்களது நடிப்பாகவே இருக்கும். முக அசைவுகள், உதட்டு அசைவுகள் என அனைத்தும் தத்ரூபமாக இருப்பதால் எது உண்மை? எது பொய் என்ற சந்தேகம்கூட வராத அளவுக்கு இந்தச் செயலி உள்ளது. இதற்காக சில வகை முக அசைவுகள், உதட்டு அசைவுகள், சில போட்டோக்களை நீங்கள் பதிவேற்றினால் போதும் அதற்குப் பின் செயலி அதை தானாகவே பொருத்தி கொள்கிறது. 

இந்தச் செயலி சீனாவில் காட்டுத்தீ  போல பரவி அனைவரையும் கவர்ந்துள்ளது. அதே வேளையில் பிரைவசிக்கு இது மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மார்பிங் எனப்படும் போலி புகைப்படங்களே பல்வேறு பிரச்னைகளை உருவாக்கி வரும் நிலையில், ஒரு வீடியோவே தத்ரூப போலியாக இருப்பதால் இதன் தாக்கம் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்கின்றனர். அரசியல் தலைவர்களின் பேச்சு, வரலாற்று நிகழ்வுகள், தனிமனித பாதுகாப்பு என இந்தச் செயலி பல்வேறு குழப்பங்களுக்கு வழிவகுக்கும் என்பதே மிகப்பெரிய அச்சமாக இருப்பதாக  தொழில்நுட்ப வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சாவ் செயலி நிறுவனம், தனிமனித பாதுகாப்பு குறித்து எங்களுக்கு புரிதல் உள்ளது. பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி பிரச்னைகள் உருவாகாத நிலைக்கு செயலி கொண்டு செல்லப்படும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com