தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது.
நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான்-2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது. orbiter, lander மற்றும் rover என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த திங்கள்கிழமை காலை மார்க்-3 ராக்கெட் மூலம், ஸ்ரீகரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படவிருந்தது. ராக்கெட்டில் எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 56 நிமிடங்களுக்கு முன்னதாக, விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அந்த கோளாறுகள் சரிசெய்யப்பட்டு, இன்று பிற்பகல் 2.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 20 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று மாலை 6.43 மணிக்கு தொடங்கியது. சந்திரயான்-2 ஏவுவது காலதாமதமானதால், அதன் பயணத்தில் சில மாற்றங்களை இஸ்ரோ செய்துள்ளது. முன்னதாக பூமியை 17 நாட்களுக்கு சுற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது 23 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
புவி வட்டப்பாதையைத் தொடர்ந்து நிலவின் வட்டப்பாதைக்கு திரும்பும் சந்திரயான்-2, செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதிக்குள் நிலவில் இறங்கும் என இஸ்ரோ கூறியுள்ளது. இதனிடையே சந்திரயான்-2 ஏவப்படும்போது, மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையமான ஸ்கைமெட் கூறியுள்ளது.
முன்னதாக நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த, இஸ்ரோ தலைவர் சிவன், சந்திரயான் 2 விண்கலத்தில் இனி தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட வாய்ப்பில்லை என்றார். கடந்த 15 ஆம் தேதி கண்டறியப்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அனைத்துமே சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், சந்திரயான் 2 வெற்றிகரமாக நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கினால் விஞ்ஞானரீதியாக நிறைய அனுகூலம் கிடைப்பது சாத்தியம் என்றும் தெரிவித்தார்.