“விஷன் அவதார்” - ஸ்டியரிங் இல்லாத மின்சார கார் அறிமுகம்
அவதார் திரைப்பட இயக்குநரான ஜேம்ஸ் கேமரூன் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மின்சார காரை தயாரித்துள்ளார். இந்த கார் மின்னணு தொழில்நுட்பக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்து உலகமெங்கும் வசூல் வேட்டை நடத்திய படம் அவதார். இந்தப் படத்தில் வித்தியாசமான கார் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
அதே போன்ற ஒரு காரை பிரபல சொகுசு கார் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் தயாரித்து VISION AVTR என பெயரிடப்பட்டுள்ள இந்த தானியங்கி மின்சார காரில் ஸ்டியரிங் கிடையாது. இந்த காரின் பின்பக்கத்தில் 33 அசையும் செதில்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை, மல்டி டைரக்ஷனில் இயங்கக்கூடியவை. இவை வெறும் அழகுக்காக மட்டும் அமைக்கப்படவில்லை. காரினுள் இருப்பவர்கள் வெளியே உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள உதவுகின்றன.
ஏவிடிஆர் காரின் வீல்கள் காரின் இயக்கத்தின்போது சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. காரினுள் இருக்கும் கண்ட்ரோலர் மூலம் காரை இயக்குது மட்டுமின்றி இதயத்துடிப்பு, சுவாசம், இரத்த ஓட்டம் உள்ளிட்டவற்றையும் அறிந்துகொள்ள முடியும். ஓட்டுநரே இல்லாமல் மின்னல் வேகத்தில் சீறிப்பாயும் இந்த காரிலுள்ள பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 700 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம்.
மின்னணு தொழில்நுட்பக் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தக் கார் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.