UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் நிர்ணயம்.. மத்திய அரசு புதிய அறிவிப்பு! விவரம் தெரிஞ்சிக்கோங்க
மத்திய அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பின் படி, தனிநபர்களுக்கிடையேயான யுபிஐ டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் இல்லை. ஆனால் ரயில்வே, தொலைத்தொடர்பு, காப்பீடு, எரிபொருள் போன்ற குறிப்பிட்ட வணிக துறைகளில் ரூ.2000-க்கு மேற்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ரூ.5 கட்டணம் மற்றும் 0.4% வர்த்தக கட்டணம், அதிகபட்சம் ரூ.300 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நொடிப்பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடப்பதால் சாமானியார்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பினர் இடையே யுபிஐ பரிவர்த்தனை முக்கியப் பங்காற்றுகிறது. யுபிஐ பயன்பாடு நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான சர்வர் பராமரிப்பு செலவுகள், அதிகரித்து வரும் பரிவர்த்தனை அளவுகள் ஆகியவற்றை கையாள வங்கிகளுக்கும், கட்டண சேவை நிறுவனங்களுக்கும் பெரும் செலவாகிறது. இதனால், யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எம்டிஆர் கட்டணத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என இத்துறையை சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன.
இந்த நிலையில், ரூ.2000-க்கும் மேற்பட்ட யுபிஐ வணிக பணப் பரிவர்த்தனைகளுக்கு, கூடுதல் கட்டணம் விதிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகின. இதனால் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது.
இத்தகைய சூழலில்தான், 2 ஆயிரம் ரூபாய் வரையிலான யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மற்றும் ரூபே டெபிட் கார்டுகளுக்கு வங்கிகளோ, சேவை நிறுவனங்களோ எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று மத்திய நிதியமைச்சகம் அரசாணை வெளியிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது 2000 ரூபாய்க்கு மேலான வணிக பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
வெளியாகியிருக்கும் அறிவிப்பின் படி, “தனிநபர்களுக்கு இடையேயான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது. அதேவேளையில் ரயில்வே, தொலைத்தொடர்பு சேவைகள், காப்பீடு, எரிபொருள் போன்ற குறிப்பிட்ட வணிக பிரிவுகளில் ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக ரூ.2,000-க்கு மேற்பட்ட வர்த்தக UPI பரிவர்த்தனைகளுக்கு 0.4% கட்டணம் விதிக்கப்படும் என்றும், ஒரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச வர்த்தக கட்டணமாக ரூ.300-ஆக நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

