UPI-க்கு இனி கட்டணம் செலுத்தவேண்டும்.. SILENT-ஆக மசோதா நிறைவேற்றம்! இது பொதுமக்களுக்கு ஆபத்தா?
இந்தியாவில் UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் ‘வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026’ நாடாளுமன்றத்தில் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டது. Zero MDR விதி மாற்றம் மூலம், ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும் பெரிய வணிகர்கள், நிறுவனம்-நிறுவனம் இடையேயான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை கட்டணம் விதிக்கப்படலாம் என தகவல். இது நாளடைவில் மக்கள் மீது திணிக்கப்படும் என அஞ்சப்படுகிறது.
நவீனகால வாழ்க்கைமுறையில் சூப்பர் மால், சூப்பர் மார்க்கெட் தொடங்கி பெட்டிக்கடை, இளநீர் கடை வரை UPI பணப்பரிவர்த்தனை வந்துவிட்டது. எல்லாம் டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில், பெரும்பாலான மக்கள் தங்கள் பாக்கெட்டுகளில் பணம் வைத்திருப்பதை உறுதிசெய்வதில்லை. ‘அதான் யுபிஐ இருக்கே, மொபைலில் PAY பண்ணிக்கலாம்’ என்ற எண்ணத்தில் 5 ரூபாய், 10 ரூபாய் பணிப்பரிவர்த்தனை முதற்கொண்டு யுபிஐ-ன் கைகளில் ஒப்படைத்துவிட்டனர்.
இந்தசூழலில் தான் சமீபகாலமாகவே யுபிஐ பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் வசூலிக்கும் முறை கொண்டுவரவிருப்பதாக பேச்சுக்கள் இருந்துவருகின்றன. ஆனால் பொதுமக்கள் அல்லது வணிகர்கள் யாருமே ஒரு பைசா கூட கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்பதே யுபிஐ-ன் அசுரத்தனமான வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்துவருகிறது. அதன் காரணமாகவே ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான பரிவர்த்தனைகளை யுபிஐ சாத்தியமாக்கி உள்ளது.
ஆனால் இதையெல்லாவற்றையும் கடந்து யுபிஐ பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் சட்டதிருத்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'வரிவிதிப்பு மற்றும் பிற சட்டங்கள் திருத்த மசோதா 2026'-ன் படி, 'பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு நடைமுறைகள் சட்டம் 2007'-இல் உள்ள 10A பிரிவின் Zero MDR என்ற 'பூஜ்யக் கட்டணம்' விதிகளை திருத்த மசோதா வழிவகை செய்கிறது. அதாவது இந்த மசோதாவின் படி குறிப்பிட்ட சில டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக்கு இனி தனியாக கட்டணம் பிடிக்கப்படும். இதற்கு அரசு அனுமதியளிக்கும் திருத்தம் செய்யப்படவிருக்கிறது.
இதை அமல்படுத்தினால், "இது படிப்படியாக முன்னேறி பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களை பாதிக்கும் சூழல் உருவாகும்" என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியிருந்தன. ஆனால் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நடந்த மற்ற அமளிகளுக்கு மத்தியில் எவ்வித விவாதமும் இன்றி சைலண்ட்டாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு..
இந்த மசோதாவை விமர்சித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "இந்த மசோதா UPI பரிவர்த்தனைகளை இலவசமாக வைத்திருக்கும் சட்டப்பூர்வ உத்தரவாதத்தை நீக்குகிறது. இது வணிகர் தள்ளுபடி விகித MDR கட்டணங்களை செலுத்த வழியை உண்டாக்குகிறது, இது எதிர்காலத்தில் அனைத்து பேமெண்ட்-களுக்கும் எளிதாக விரிவுபடுத்தப்படலாம். இந்தச் செலவை தவிர்க்க முடியாமல் இறுதியில் சாதாரண மக்கள்தான் அதை ஏற்க வேண்டியிருக்கும், அவர்கள் இனி UPI பரிவர்த்தனைகளைப் பயன்படுத்த பணம் செலுத்த வேண்டியிருக்கும். UPI-ஐ நிதி ரீதியாக நிலைத்திருக்கச் செய்ய இதுவே ஒரே வழி என்று மத்திய அரசு கூறுவது பொய்” என விமர்சித்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த நிதியமைச்சர், இது தவறான வதந்தி என்றும், டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களின் பாதுகாப்பை அதிகரிக்கவே இத்தகைய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் மசோதாவை பொறுத்தவரையில், பொதுமக்களால் செய்யப்படும் நபர்-நபர் பணப்பரிவர்த்தனைகள், சாலையோர வியாபாரிகள், சிறு வணிகர்கள் மற்றும் பெட்டிக் கடைக்காரர்கள் இடையேயான பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கப்படாது என்றும், மாறாக ஆண்டுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும் பெரு வணிகர்கள் மற்றும் நிறுவனம்-நிறுவனம் இடையே செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் மறுபுறம் ஆன்லைன் தளம், வணிகர்களுக்கு செய்யப்படும் 2000 ரூபாய்க்கு மேலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 0.25% முதல் 0.4% வரை MDR கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.
இருப்பினும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னரே, இதுகுறித்த முழுமையான வழிகாட்டுதல் இந்திய தேசிய பரிவர்த்தனைக் கழகத்தால் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
MDR என்பது வணிகர் தரப்புக் கட்டணமாக இருந்தாலும், இது நாளடைவில் மக்கள் மீதான கட்டணமாக வணிகங்கள் திணிக்கக்கூடும் என அஞசப்படுகிறது. மக்கள் மீதான இந்த தாக்கம் எப்படி இருக்கப்போகிறது என்பது MDR விகிதம் மற்றும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் விதிகளை பொறுத்தே தெரியவரும்.

