Whatsapp, Telegram உள்ளிட்ட வலைதள செயலிகளுக்கு 90 நாட்களே கெடு.. வருகிறது புது விதிகள்! | Simcard
அதிகரித்து வரும் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த மத்திய தொலைத் தொடர்புத் துறை புதிய மற்றும் கடுமையான விதிகளை அறிவித்துள்ளது. இந்தியாவில் வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டெலிகிராம், சிக்னல், அரட்டை, ஜியோ சேட், ஸ்னாப் சேட், ஷேர் சாட் உள்ளிட்ட பல சமூக வலைதள செயலிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்த சமூக வலைதள செயலிகளை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யும் போது சிம் கார்டு அவசியம். இதன் பிறகு சிம் கார்டை அகற்றினாலோ அல்லது சிம் கார்டு செயலிழந்துவிட்டாலோ கூட செயலிகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும். சமூக வலைதள செயலிகளை பயன்படுத்த இணைய வசதி மட்டும் போதும். இந்த வசதி, சைபர் குற்றவாளிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக, ஒருமுறை செயலியை ஆக்டிவ் செய்தபின் சிம் கார்டை செயலிழக்கச் செய்துவிட்டு, நாட்டிற்கு வெளியே இருந்துகூட சைபர் குற்றங்களிலும் மோசடிகளிலும் ஈடுபட இதுபோன்ற செயலிகள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தன.
எனவே மொபைல்போனில் ஆக்டிவ் சிம் கார்டு இருந்தால் மட்டுமே வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த முடியும். சிம் கார்டு இல்லையென்றால் சமூக வலைதள செயலிகள் தானாகவே செயலிழந்து விடும் என்று மத்திய தொலை தொடர்புத்துறை புதிய விதிகளை அறிவித்துள்ளது. கணினி மற்றும் மடிக்கணினியில் சமூக வலைதளங்களை ஒருமுறை லாகின் செய்துவிட்டால் அந்த சமூக வலைதளங்களை தொடர்ந்து பயன்படுத்த முடியும். புதிய விதிகளின்படி 6 மணி நேரத்துக்கு ஒருமுறை சமூகவலைதளங்கள் தானாகவே லாக் அவுட் ஆகிவிடும். மீண்டும் வழக்கம் போல் லாக் இன் செய்ய வேண்டும்.
தொலைத் தொடர்புச் சேவைகளைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கவும், பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. நவம்பர் 28ஆம் தேதி மத்திய தொலைத்தொடர்பு துறை பிறப்பித்த இந்த புதிய உத்தரவு, 'இணைய பாதுகாப்பு கொள்கை திருத்த விதிகள் 2025'இன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில் தகவல் பரிமாற்றச் செயலிகள் என்று சொல்லப்படுகிற வாட்ஸ்அப், டெலிகிராம், சிக்னல், ஜோஷ் போன்ற செயலிகளுடன் இணைக்கப்பட்டுள்ள எண்ணின் சிம் கார்டு, பயனரின் டிவைசில் கட்டாயம் 'ஆக்டிவில்' இருப்பதை அனைத்து நிறுவனங்களும் 90 நாட்களுக்குள் உறுதி செய்யவேண்டும்.
இந்தியாவில் செயலிகள் தகவல் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குகிற அனைத்து நிறுவனங்களும் 120 நாட்களுக்குள் இந்த விதிமுறைகளுக்கான இணக்க அறிக்கைகளைத் சமர்ப்பிக்க தகவல் தொலைத்தொடர்பு துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்காத பட்சத்தில், தொலைத்தொடர்பு சட்டம் 2023இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.

