பூமியின் மொத்த கடல் நீர்மட்டத்தைவிட 140 ட்ரில்லியன் மடங்கு அதிக நீர் இருப்பு கண்டுபிடிப்பு!
நீர் தேக்க அளவு: பூமியின் பெருங்கடல்களின் அளவை விட 140 டிரில்லியன் மடங்கு அதிகம்
பூமியிலிருந்து 12 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் அமைந்துள்ள APM 08279+5255 என்ற பிரம்மாண்டமான கருந்துளை குவாசரைச் (quasar) சுற்றி வரும் நீராவியின் ஒரு பெரிய தேக்கத்தை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த வியக்க வைக்கும் கண்டுபிடிப்பில், குவாசரை சுற்றிவரும் நீர்தேக்கமானது பூமியின் பெருங்கடல்களின் அளவை விட சுமார் 140 டிரில்லியன் மடங்கு அதிகமாக உள்ளது, இது பிரபஞ்சத்தில் அறியப்பட்ட மிகப்பெரிய நீர்த்தேக்கமாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நமது சூரியனை விட 20 பில்லியன் மடங்கு நிறை கொண்ட ஒரு பிரம்மாண்டமான கருந்துளையால் இயங்கும் அந்த குவாசரானது, ஆயிரம் டிரில்லியன் சூரியன்களுக்குச் சமமான அபரிமிதமான ஆற்றலை உற்பத்தி செய்கிறது என தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் கருந்துளையில் கண்டுபிடித்தது என்ன?
பிராட்ஃபோர்டின் குழு மற்றும் வானியலாளர்களின் தனிக் குழு ஆகியவை இணைந்து APM 08279+5255 மற்றும் அதன் கருந்துளையை ஆய்வு செய்தனர். இந்த கருந்துளையானது தனக்கு அருகில் இருக்கும் பொருட்களை வளைத்து உள்நோக்கி இழுக்கிறது.
அது போலவே, கருந்துளையைச் சுற்றியுள்ள வாயு மற்றும் தூசியை இழுத்து வெப்பமாக்குகிறது. இப்படி இதுவரை கண்டறியப்படாத மூலக்கூறுகளால் ஒரு பெரிய பகுதி உருவாகி உள்ளது. அதனால் உருவான ஆற்றலில் அங்கு நீராவி உருவாகி பெருங்கடலானது உருவாகி உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
குவாசர் பற்றிய உண்மைகள்
அரை நூற்றாண்டுக்கு முன்னர்தான் கருந்துளையின் குவாசர்கள் முதன்முதலில் கவனிக்கப்பட்டன. இவையாவும் சாதாரண நட்சத்திரத்தைப் போல இருக்காது. நாம் பூமியில் இருந்து குவாசர்களைப் பார்க்கையில், தொலைதூர விண்மீன் திரள்களின் மையத்திலிருந்து அவை பிரகாசமாக ஒளிரும். அந்த பிரகாசமானது அனைத்து விண்மீன் நட்சத்திரங்களையும் மிஞ்சும் ஒளியைக்கொண்டு இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இத்தனை பிரகாசமாக ஒளியைக்கொண்டிருக்கும் குவாசரின் கருந்துளையானது நமது சூரியனை விட மில்லியன் அல்லது பில்லியன் மடங்கு கனமானது. அதனால்தான் கருந்துளைகளை சுற்றி வாயு மற்றும் தூசி சுழலும்போது, சுழலும் பொருள் வெப்பமடைந்து ஆற்றலை வெளியிடுகிறது.
தொடர்ந்து இந்த ஆற்றல் அனைத்து வகையான அலைநீளங்களிலும் வெடித்து, குவாசர்களை இதுவரை கண்டிராத பிரகாசமான, ஆற்றல்மிக்க ஒன்றாக மாற்றுகிறது என்பது ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பாக உள்ளது.