
ட்விட்டருக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள ’த்ரெட்ஸ்’ (Threads) செயலியானது அறிமுகப்படுத்தப்பட்ட 5 நாட்களுக்குள் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை பெற்றுள்ளது சாதனைக்குரிய செய்தியாகும். அதுமட்டுமல்லாமல் வேகமாக வளர்ந்து வரும் Chat GPT யின் சாதனையையும் த்ரெட்ஸ் செயலியானது முறியடித்துள்ளது.
மற்ற செயலியான Chat GPT 100 மில்லியன் பயனர்களை எட்ட இரண்டு மாதங்களும், TikTok ஒன்பது மாதங்களையும், இன்ஸ்டாகிராம் அதன் 2010 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு அந்த அடையாளத்தை எட்டவே இரண்டரை ஆண்டுகளையும் எடுத்துக்கொண்டது.
இந்நிலையில் ட்விட்டருக்கு போட்டியாக Instagram ஆல் அறிமுகப்படுத்தப்பட்ட த்ரெட்ஸ் செயலியானது ஐந்து நாட்களுக்குள் 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை பதிவு செய்துள்ளது சாதனை என்று தரவு கண்காணிப்பு வலைத்தளங்கள் கூறுகின்றன.
கடந்த புதன் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் மட்டும் 100 நாடுகளில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோர்களில் த்ரெட்ஸ் செயலி உபயோகத்திற்கு வந்துள்ளது . ஆனால் ஐரோப்பாவில் மட்டும் த்ரெட் செயலி தனது கால் தடத்தை பதிக்க இயலவில்லை. அதற்கு காரணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டதிட்டங்கள் மெட்டாவிற்கு பெரும் தலைவலியை உண்டு பண்ணுகிறது என்கிறார்கள் .
ட்விட்டர் வீழ்ச்சி அடைந்தது ஏன்?
ட்விட்டரில் மட்டும் சுமார் 200 மில்லியன் வழக்கமான பயனர்கள் இருந்த நிலையில், டெஸ்லா அதிபர் எலோன் மஸ்க் கடந்த ஆண்டு ட்விட்டரை வாங்கி ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ததிலிருந்து ட்விட்டர் செயலியில் மீண்டும் மீண்டும் பல தொழில்நுட்ப தோல்விகளை சந்தித்து வருகிறது.
மேலும், முன்பு இருந்த இலவச சேவைகளுக்கான கட்டணங்களை அறிமுகப்படுத்தி, தடைசெய்யப்பட்ட்ட கணக்குகளை மீண்டும் இயங்குதளத்தில் அனுமதித்ததன் மூலம் பல பயனர்கள் தாங்கள் ட்விட்டரில் இயங்குவதை நிறுத்திக்கொண்டனர். இது போல் பயனாளர்களுக்கு பல அசௌரியத்தை ட்விட்டரானது செய்து வந்ததாக கூறப்படும் நிலையில் அதற்கு போட்டியாக வந்த த்ரெட்ஸ் செயலியை உபயோகப்படுத்துவதில் பயனாளார்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையில், வர்த்தக ரகசியங்கள் மற்றும் அறிவுசார் சொத்துக்களை திருடியதற்காக மெட்டா மீது வழக்குத் தொடரப்போவதாக எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் எலான் மஸ்க் , மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க்குடனான போட்டி பல ஆண்டுகளாக நடந்து வந்தாலும், தற்பொழுது இருவருக்கும் இடையில் அது உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடதக்கது.