ஸ்மார்ட்போனால் உலகை மாற்ற முடியும் என்று 10 ஆண்டுகளில் நிரூபித்த ஆப்பிள்
ஸ்மார்ட் போனால் உலகை மாற்ற முடியும் என்று பத்தே ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் நிரூபித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் பெஞ்ச் மார்க் தயாரிப்பான ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. செல்போன் போன்ற கையடக்கக் கருவிகளில் டச் ஸ்க்ரீன் எனப்படும் தொடுதிரையைத் தாங்கி வெளியான முதல் செல்போன் என்ற பெருமையுடன் ஸ்டீவ் ஜாப்ஸால் ஆப்பிள் ஐபோன் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக ஆப்பிள் நிறுவனத்தினை மாற்றிக் காட்டிய மேஜிக்கின் தொடக்கம் ஐபோனாலேயே தொடங்கியது எனலாம். அதுவரை கீபேட்கள் மூலம் மொபைல்போன்களை இயக்கிக் கொண்டிருந்த உலக செல்போன் பயனாளர்கள், ஒரே ஒரு பட்டனுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோனை விநோதமாகப் பார்த்தனர். ஆனால், ஸ்மார்ட்போன்களின் எதிர்காலம் இதுதான் என்பதை ஐபோன் மூலம் உலகுக்கு உணர்த்தினார் ஸ்டீவ் ஜாப்ஸ். ஒரே ஒரு ஸ்மார்ட்போன் மூலம் உலகையே மாற்ற முடியும் என்று கடந்த 10 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் நிரூபித்துள்ளது என்றே கூறலாம். ஐபோன் வரிசையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோன் 7 கேட்ஜெட் பிரியர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க கண்ணடியால் ஆன ஐபோன் 8 நடப்பாண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.