ஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை மாற்றியமைத்த கூகுள்
ஆண்ட்ராய்ட் வெர்சனில் இனி புதிதாக வரும் இயங்குதளங்களுக்கு இனிப்புகளின் பெயர்கள் வைக்கும் வழக்கத்தை கைவிடுவதாக கூகிள் ஆண்ட்ராய்ட் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டின் 10 வருட பாரம்பரியத்தை கூகுள் தகர்த்துள்ளது.
கோடிக்கணக்கான பயன்பாட்டாளர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் செல்போன் இயங்குதளம் ஆண்ட்ராய்டு. ஒவ்வொரு முறையும் புதிய இயங்குதளத்தை வெளிவிடும்போது இனிப்பு வகைகளின் பெயர்களை வைப்பது வழக்கம்.
ஆல்ஃபா, பீட்டா, கப்கேக், டோனட், எக்லைர், ஃப்ரோயோ, ஜிஞ்சர் பிரெட், ஹனிகோம்ப், ஐஸ்கிரீம் சேண்ட்வெஜ், ஜெல்லிபீன், கிட்கேட், லாலிபாப், மார்ஸ்மல்லொ, நவுகேட், ஓரியோ, என அதன் வரிசை நீண்டு கொண்டே வந்தது. அடுத்ததாக வரவிருக்கும் ஆண்ட்ராய்ட் Q-ற்கு எந்த இனிப்பு வகையின் பெயர் வைக்கப்பட்டும் என்று விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், இனி இனிப்பு பெயர் வரிசையையே கைவிடப்போவதாக கூகிள் ஆண்ட்ராய்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கூகிள் ஆண்ட்ராய்ட் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் புதிய இயங்குதளமான ஆண்ட்ராய்ட் Q-விற்கு ஆண்ட்ராய் 10 என்று பெயரிட்டுள்ளது. இனிவரும் காலங்களில் வெளியாகும் ஆண்ட்ராய்ட் இயங்குதளங்கள் ஆண்ட்ராய்ட் -11, ஆண்ட்ராய்ட்-12 என்ற வரிசையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு வைக்கப்பட்ட ஆண்ட்ராய்ட் இயங்குதளங்களின் பெயர்கள் உலகளாவிய சந்தையில் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை என்றும் அதன் காரணமாக அனைவருக்கும் எளிதாக புரியும் வகையில் பெயர்கள் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டதே இந்த திடீர் பெயர் மாற்றத்திற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் புதிய லோகோவையும் வெளியிட்டுள்ளது.