இந்தியா| ஒரே ஆண்டில் 4.25 லட்சம்பேரின் வேலை காலி.. 2030-ல் 70% உயரும்! சவால் கொடுக்கும் AI!
2024-2025ஆம் ஆண்டுகளில் கூகுள், அமேசான், மெட்டா, சிஸ்கோ போன்ற முன்னணி நிறுவனங்கள், உலகளவில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்களை, பணிநீக்கம் செய்துள்ளன. இந்தியாவில் மட்டும் 2023இல் 4.25 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழில்நுட்ப ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். செயல்களை மனித உதவியில்லாமல் இயங்கச் செய்யும் தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பங்களின் வளர்ச்சி புதிய சவால்களை முன்வைக்கிறது.
குறிப்பாக, CHAT GPT, GEMINI, COPILOT போன்றவற்றின் பயன்பாடு, குறைந்த திறனுள்ள பணிகளை மாற்றி, வேலை வாய்ப்புகளை குறைத்துள்ளது.
70% பணியாளர்கள் வேலை இழப்பார்கள்!
இந்தியாவின் மிகப்பெரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறையான IT-BPM, 2023ஆம் ஆண்டு நிதியாண்டில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது. இந்த துறையில் நேரடியாக 54 லட்சம் பேர் வேலை செய்கின்றனர். 2030ஆம் ஆண்டுக்குள் 69 சதவிகித வேலைகள் தானியங்கி தொழில்நுட்பத்திற்கு மாறக்கூடியவை என கணிக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. தொழில்நுட்பம் காரணமாக தொழில்நுட்பத் துறையில் 70 சதவிகிதம் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படலாம் என்று நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
இந்தியாவின் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்ட பணிநீக்கங்கள் மற்றும் தானியங்கி மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமன்றி வேலைவாய்ப்பு சந்தையிலும் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதனை எதிர்கொள்வதற்காக புதிய திறன்களை கற்றுக்கொள்வது மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்கும் மனப்பாங்கு அவசியமாகிறது.