சென்னை ஐஐடி உருவாக்கிய ’அக்னி கூல்’... எதிர்காலத்தில் லாரியிலிருந்து கூட ராக்கெட்டை ஏவமுடியும்!

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தையும் விட சென்னை ஐஐடி விரைவாக ராக்கெட் உருவாக்கி வருவதாக அக்னி கூல் நிறுவனரும் சென்னை ஐஐடி பேராசிரியருமான சத்யநாராயணன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி
சென்னை ஐஐடிபுதியதலைமுறை

உலகில் தற்போது எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தைத் தவிர வேறு யாரும் 3d பிரிண்ட் தொழில்நுட்பத்தில் ராக்கெட் வடிவமைப்பு மேற்கொள்ளவில்லை, தற்போது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தையும் விட சென்னை ஐஐடி விரைவாக ராக்கெட் உருவாக்கி வருவதாக அக்னி கூல் நிறுவனரும் சென்னை ஐஐடி பேராசிரியருமான சத்யநாராயணன் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக புதிய தலைமுறை இடம் கூறியது என்னவென்றால்,

2018 ஆம் ஆண்டிலிருந்து இதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். இன்ஜெக்டர், இக்னைட்டர் போன்றவற்றை 3d பிரின்டிங் தொழில்நுட்பத்தில் வடிவமைத்தோம். ஐஐடி வளாகத்தில் தான் ராக்கெட் முழுமையாக வடிவமைக்கப்பட்டது. என்ஜினை முப்பது முதல் 40 வரை பரிசோதனை மேற்கொண்டுள்ளோம். ஏவுகணை வெற்றி பெற வேண்டும் என எத்தனை ஆண்டுகளாக பாடுபட்டோம் நேற்று வெற்றி அடைந்தோம்.

உலோக பவுடரை லேயர் லேயராக வடிவமைப்பது தான் 3d பிரிண்ட் தொழில்நுட்பம். ஒரு 3d பிரிண்டரில் இரண்டு என்ஜின்களை உருவாக்க முடியும். விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட்டில் அதிகபட்சம் 8 இன்ஜின்கள் வரை தேவைப்படும். எனவே ஒரு ராக்கெட் இயங்கத் தேவையான இன்ஜின்களை உருவாக்க ஒரு வாரம் போதுமானது. மொத்தமாக ராக்கெட்டை வடிவமைத்து நிறுத்த இரண்டு வார காலம் போதுமானது. இன்றைய தேதியில் ஸ்பேஸ் நிறுவனத்தை தவிர யாரும் 3d பிரிண்ட் ராக்கெட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை. அவர்களையும் விட விரைவாக நம்மால் இனி ராக்கெட்டை உருவாக்க முடியும்.

ராக்கெட் தயாரிப்பதில் தான் நாங்கள் மும்மரமாக இருந்தோம். ஆனால் ராக்கெட் ஏவுவது குறித்தான எந்த திறனும் எங்களிடம் இருக்கவில்லை. மார்ச் 22 ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் கடைசி நேரத்தில் கணினியில் மென்பொருள் பிரச்சனை ஏற்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் ஆலோசனைப்படி ராக்கெட் ஏவுவதற்கான திறனையும் பெற்றும், இருக்கக்கூடிய பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்தோம்.

அக்னி கூல் நிறுவனம் ஐஐடியால் உருவாக்கப்பட்டது. ஐஐடியில் தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அடுத்த கட்டமாக விண்வெளிக்கு செல்ல உள்ள ஒரு ராக்கெட்டை வடிவமைக்க உள்ளோம். தற்போது வடிவமைத்துள்ள ராக்கெட் புவி தாழ்வட்டப் பாதைக்கு சென்று செயற்கைகோளை நிலை நிறுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரே அடுக்குள்ள ராக்கெட் தற்போது வடிவமைத்து விட்டோம் அடுத்ததாக இரண்டு மூன்று அடுக்கு உள்ள அதிக எண்ணிக்கையிலான என்ஜின் கொண்ட பெரிய ராக்கெட்டுகளை உருவாக்க உள்ளோம்.

இதுதான் நாட்டிற்கு மிகவும் அவசியமான ஒன்று. அதிக தொழில்நுட்பம் கொண்ட ஐஐடியில் இதுபோன்ற புதிய தொழில்நுட்பம் வெளிவர வேண்டும். தனியார் நிறுவனங்கள் விண்வெளி துறையில் ஈடுபடும்போது விண்வெளி வர்த்தகம் அதிகரிக்கும். விண்வெளி துறையில் இந்தியாவின் பங்கை 10 சதவீதம் அளவிற்கு 2030க்குள் அதிகரிக்க வேண்டும் என்றால் தனியார் பங்களிப்பு விண்வெளி துறையில் அவசியம். இன்னும் நிறைய இளைஞர்களின் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் விண்வெளி துறையை நோக்கி வரவேண்டும். செயற்கைக்கோள்கள் ஏவுகணைகள் சென்சார்கள் போன்றவற்றை வடிவமைக்க வேண்டும். நமது மாணவர்களின் மனித வளத்தை விண்வெளி துறையில் பயன்படுத்த வேண்டும்.

எங்கும் எப்போதும் ஏவும் ராக்கெட் என்பதுதான் அக்னி கூல் நிறுவனத்தின் இலக்கு. எங்கிருந்து வேண்டுமானாலும் இலகுவாக ராக்கெட் ஏவ வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ஒரு லாரியில் ராக்கெட் ஏவுத்தளத்தை உருவாக்கி அதிலிருந்து ராக்கெட்டை ஏவும் அளவிற்கான திட்டங்கள் கூட வைத்துள்ளோம். இஸ்ரோ எங்களுக்கு 800 சதுர அடி நிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் கொடுத்துள்ளனர். அந்த இடத்தில் தான் தனுஷ் எனும் புதிய ஏவு தளத்தை உருவாக்கியுள்ளோம்." என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com