சந்திரயான்-2 விண்கலத்தை தொடர்ந்து 2020ஆம் ஆண்டு சூரியனுக்கு விண்கலம் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்வதற்கான சந்திரயான்-II விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் சரியாக மதியம் 2.43 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்த விண்கலம் பூமியின் வட்டப்பதையில் நிலை கொண்டுள்ளது. இந்த விண்கலம் வரும் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்திரயான்-II விண்கலத்தை தொடர்ந்து அடுத்த ஆண்டு இஸ்ரோ சூரியனுக்கு விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது. இந்த விண்கலத்திற்கு ‘ஆதித்யா-எல்1’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் சூரியனின் ஒளிவட்ட பாதையில் வரும் கதிர்வீச்சு, சூரியனில் இருக்கும் வெப்பம் மற்றும் சூரியனின் நிற மண்டலம் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய உள்ளது. இந்த விண்கலம் 2020ஆம் ஆண்டில் முதல் பாதிக்குள் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. அத்துடன் இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் வெள்ளி கிரகத்திற்கு விண்கலன் ஒன்று அனுப்பப்படும் என்று மத்திய விண்வெளி அமைச்சகம் தெரிவித்துள்ளது.