நான் தான் ஏலியன்... நாசாவிற்கு கடிதம் எழுதிய சிறுவன்
9 வயது சிறுவன் ஜேக் டேவிஸ், நாசாவின் கிரக பாதுகாப்பு அதிகாரி பணிக்காக விண்ணப்பித்துள்ளான்.
பூமியை ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரகவாசிகளிடம் இருந்து பாதுகாக்க கிரக பாதுகாப்பு அதிகாரியை நாசா நியமிக்க உள்ளதாக அறிவித்திருந்தது. அவருக்கு 187000 அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்படும் எனவும் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தது. மேலும் இந்த பணிக்கு சில முக்கிய தகுதியையும், நாசா கோரியிருந்தது.
1. பாதுகாப்பு அதிகாரி வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர், ஒரு அரசாங்கத்தின் ராணுவம் அல்லாத உயர் அதிகாரியாக இருக்க வேண்டும்.
2. கணிதம், பொறியியல் அல்லது உயிரினங்கள் குறித்த அறிவியல் தொடர்பான பாடத்தில் உயர்கல்வி முடித்திருக்க வேண்டும்.
3. விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் மேம்பட்ட அறிவுடன் இருக்க வேண்டும்
உள்ளிட்ட பல நிபந்தனைகளை நாசா விதித்திருந்தது. இந்நிலையில், கிரக பாதுகாப்பு அதிகாரி பணிக்கு 4-ம் வகுப்பு பயிலும் 9 வயது ஜேக் டேவிஸ் என்ற சிறுவன் விண்ணப்பித்துள்ளான். இது தொடர்பாக நாசாவுக்கு ஜேக் எழுதியுள்ள கடிதத்தில்,
"எனது பெயர் ஜேக் டேவிஸ். பூமியின் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறேன். எனக்கு வயது வேண்டுமானால் 9 இருக்கலாம் ஆனால், இந்தப் பணிக்கு பொருத்தமாக இருப்பேன் என்று நான் நினைக்கிறேன். என்னை என் சகோதரி ஏலியன் என்றே அழைப்பாள். மேலும் விண்வெளி மற்றும் ஏலியன் தொடர்பாக வெளியாகியுள்ள அனைத்துப் படங்களையும், மார்வெல் 'ஏஜென்ட்ஸ் ஆஃப் ஷீல்டு' சீரியல்களையும் நான் பார்த்துள்ளேன். 'மென் இன் பிளாக்' படத்தையும் பார்த்துவிடுவேன் என்று நம்புகிறேன். விண்வெளி தொடர்பான வீடியோ கேம்ஸ் விளையாட்டுகளில் சிறந்து விளங்குகிறேன். நான் இளமையாக இருப்பதால் ஏலியன்கள்போல சிந்திக்கக் கற்றுக்கொள்வேன் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கடிதத்தை முடிக்கும் போது இப்படிக்கு ஜேக் டேவிஸ், கேலக்ஸி ஆஃப் கார்டியன், ஃபோர்த் கிரேடு என எழுதியுள்ளான்.