மக்களின் வாழ்க்கையை 5ஜி சேவை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கும் - ட்ராய்

மக்களின் வாழ்க்கையை 5ஜி சேவை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கும் - ட்ராய்
மக்களின் வாழ்க்கையை 5ஜி சேவை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கும் - ட்ராய்

5ஜி தொலைத்தொடர்பு சேவை மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாகப் பெருகும் என இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தெரிவித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் செல்போன் பயனாளர்கள் தற்போது 4ஜி இணைய சேவையை பயன்படுத்தி வருகின்றனர். 4ஜி மூலம் அதிவேக இண்டர்நெட், லைவ் ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி, தடைபடாத துல்லியமான வீடியோ கால்கள் போன்ற எண்ணற்ற வசதிகள் சாத்தியமாகின. 

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 5ஜி அலைக்கற்றை பயன்பாட்டை கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது. 5ஜி நடைமுறைக்கு வந்தால் 4ஜியைக் காட்டிலும் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 5ஜிக்கு பிறகு தகவல் பரிமாற்றத்தில் வீடியோவின் பங்கே அதிகமாக இருக்கும். சிசிடிவி கேமராக்களின் கண்காணிப்பில் பல முக்கிய மைல்கல்லை எட்ட முடியும் என்றும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் 5ஜி சேவை மக்களின் வாழ்க்கையை மிகப்பெரிய அளவில் மாற்றியமைக்கும் என்றும் டிராய் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 5ஜி சேவை செயலாக்கம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் டிராய் இவ்வாறு கூறியுள்ளது. ஒரு நொடியில் ஒரு ஜிபி டேட்டா பதிவிறக்க வேகம், இடைநிற்றல் இல்லாமல் வீடியோ காணும் வசதி, துல்லியமான காட்சிகள், ஒலிகள் ஆகியவை 5ஜி சேவையின் சிறப்பம்சங்களாக கூறப்படுகிறது. 5ஜி சேவை அமெரிக்காவிலும் தென்கொரியாவிலும் அறிமுகமாகியுள்ளது. 

அடுத்து இங்கிலாந்து, சீனா போன்ற நாடுகளும் குறிப்பிட்ட நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளன. இந்தியாவிலும் ஒரு சில ஆண்டுகளில் 5ஜி சேவை அமலுக்கு வரும் எனத் தெரிகிறது. இதற்கான அலைக்கற்றை ஏலத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கிடையில் இந்தியாவில் ‌5ஜி கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வோடஃபோன் ஐடியா தொடங்க உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com