செல்போன் இல்லாத “செம செல்ஃபி” - வாழ்வை உணர்த்தும் வைரல் போட்டோ

செல்போன் இல்லாத “செம செல்ஃபி” - வாழ்வை உணர்த்தும் வைரல் போட்டோ

செல்போன் இல்லாத “செம செல்ஃபி” - வாழ்வை உணர்த்தும் வைரல் போட்டோ
Published on

5 சிறுவர்கள் செல்போன் இல்லாமல் காலணியைக் கொண்டு செல்ஃபி எடுப்பதுபோல் போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது அனைவரிடத்திலும் இருக்கும் ஒரு அங்கமாகிவிட்டது. அதிலும் ஸ்மார்ட்போன் இளைஞர்களுக்கு நாடித்துடிப்பாகிவிட்டது. சுவாசிக்காமல் கூட இருக்கிறோம் ஆனால் ஸ்மார்ட்போன் இன்றி இருக்கமாட்டோம் என்று கூறு அளவிற்கு இளைஞர்கள் அதற்கு அடிமையாகிவிட்டனர் என்றால் அது மிகைப்படுத்தி கூறுவது அல்ல. அந்த அளவிற்கு அவர்களது எண்ணங்களோடு ஸ்மார்ட்போன் கலந்துவிட்டது. பொழுது விடிந்தால் தொடங்கும் ஸ்மார்ட்போன் பொழுதுபோக்கு, கழிவறை முதல் இரவு படுக்கை விரிப்புக்குள் கண் மூடும் வரை தொடர்கிறது. 

விழாக்கள் என்றால் முன்பெல்லாம் மக்கள் கூடி மகிழ்வதை பார்க்க முடியும். ஆனால் இன்று அனைத்து விழாக்களிலும் மக்கள் கூடினாலும் அவர்களது மனம் கூடுவதில்லை. அவர்கள் கூட்டத்தில் இருந்தாலும் செல்போனை வைத்துக்கொண்டு தனிமையாக உள்ளனர். முன்பெல்லாம் சாலையில் ஒருவர் விபத்துக்குள்ளானாலோ அல்லது தடுமாறி விழுந்தாலோ உடனே சிலர் ஓடி வந்து தூக்குவார்கள். ஆனால் இன்று முதலில் செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்கிறார்கள். குறைகளை மட்டுமே கூறுவதாக எண்ண வேண்டாம். குற்றங்களை படம்பிடிக்க, நல்ல விஷயங்களைக் கூற, அழகிய புகைப்படங்கள் எடுக்க என செல்போன் பயன்பட்டாலும், இவற்றையெல்லாம் விட அதிகம் குறைகள் தான். 

கூட்டாக வாழும் குடும்பத்தை ஒரே வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்தி விடுகின்றன இந்த ஸ்மார்ட்போன்கள். தாய் ஒருபுறம், தந்தை ஒருபுறம், குழந்தை ஒருபுறம் என ஆளுக்கொரு ஸ்மார்ட்போனை வைத்துக்கொண்டு நேரத்தை வீணடிக்கின்றார்கள். பள்ளிக்கு செல்வதற்கு முன்பே ஒரு குழந்தை ஸ்மார்ட்போனை கேட்டு அடம்பிடிக்கும் கலாச்சாரத்திற்குள் நாம் விழுந்துவிட்டோம். அந்த ஸ்மார்ட்போன் அந்தக் குழந்தையின் மூளையை மழுங்கச் செய்வதுடன், அதனை எப்போது கவனச்சிறதல் கொண்ட குழந்தையாக மாற்றிவிடும் எனக்கூறுகின்றனர் மருத்துவர்கள். 

இப்படி உலகமே ஒரு கைக்குள் அடங்கும் ஸ்மார்ட்போனுக்கு முடங்கிக்கொண்டு வரும் நிலையில், மகிழ்ச்சிக்கு நல்ல மனங்கள் தான் தேவை என்பதை உணர்த்தும் வகையில் ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது. ஒருசிறுவன் ஸ்மார்ட்போன் போல கையில் காலணியை வைத்துக்கொண்டு நிற்க, அந்த கற்பனை போனுக்கு ஒரு நான்கு குழந்தைகள் போஸ் கொடுக்கின்றன. அந்தக் குழந்தைகளின் மகிழ்ச்சி கல்லங்கபடமற்றதாக காட்சியளிக்கிறது. இதனை ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அவரை இரண்டு குழந்தைகள் பார்க்கின்றன. மனிதன் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அடிப்படை வசதிகளே போதும் என்பதையும், பணம், வசதி, ஸ்மார்ட்போன் இவையெல்லாம் தேவைக்குத்தானே தவிர அவற்றின் தேவைக்கு நாம் இல்லை என்பதை அந்த புகைப்படம் உணர்த்தியுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com