ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இலவச ஜியோஃபோன் முன்பதிவு நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கப்பட்டு தற்போது வரை 30 லட்சம் மொபைல்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் 2ஜி வாடிக்கையாளர்களை குறிவைக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோ ஃபோனை வாடிக்கையாளர்கள், 1,500 ரூபாய் முன்பணம் செலுத்தி வாங்க முடியும். புதிய ஜியோ ஃபோனை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை தொடங்கப்பட்ட ஜியோ ஃபோன் முன்பதிவு ஒரே நாளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
ஜியோ ஃபோனை ஜியோ இணையதளம் மற்றும் மை ஜியோ ஆப்பில் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டியதை தொடர்ந்து இணையதளம் முடங்கியதாக கூறப்படுகிறது. ஜியோமணி ,பேடிஎம் போன்ற இ-வால்ட்கள் தவிர யூபிஐ, கிரெடிட், டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் வாயிலாக முன்பணமாக ரூ. 500 பணத்தை செலுத்தலாம். அடுத்தகட்டமாக ஜியோஃபோனை டெலிவரி செய்யும்போது மீதமுள்ள தொகை ரூ.1000 செலுத்தலாம் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர் மற்றும் மினி ஸ்டோர் ஆகியவற்றிலும் முன்பதிவு செய்யலாம்.
முன்னதாக தினமும் ஒரு லட்சம் ஜியோஃபோன்களும், வாரத்திற்கு 40 முதல் 50 லட்சம் ஜியோஃபோன்களை விற்பனை செய்ய ஜியோ திட்டமிட்டிருந்த நிலையில் முதல் நாளிலே 30 லட்சம் மொபைல்கள் முன்பதிவு செய்து வெற்றியை பதித்துள்ளது.