2025 Recap
2025 RecapPt web

2025 Recap | இந்தாண்டு வெளியான தொழில்நுட்ப வரவுகளின் தொகுப்பு.!

ரே-பான், ஏ.ஐ.கண்ணாடி, டெஸ்லா ரோபோடாக்ஸி, டாடா சியாரா ரீ-என்ட்ரீ என 2025ஆம் ஆண்டு புத்தம் புதிய கேட்ஜெட் மற்றும் ஆட்டோமொபைல்களின் ஆண்டாக மாறியது. இது குறித்துப் பார்க்கலாம்.

2025 ஆம் ஆண்டு அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் உலக நிகழ்வுகள் மூலம் இந்தியாவையும் உலகத்தையும் பாதித்த முக்கிய தருணங்களை பதிவு செய்த ஒரு முக்கியமான ஆண்டாக அமைந்தது. இந்த இணைப்பில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக பார்க்கலாம்.

1. ஷாவ்மி யு7 கார்.!

ஷாவ்மி யு7 கார்
ஷாவ்மி யு7 கார்Pt web

ஷாவ்மி நிறுவனம், ஜூன் 2025இல் YU7 எஸ்யூவியை அறிமுகப்படுத்தியது. இது, சீனாவில் முன்பதிவு தொடங்கப்பட்ட 3 நிமிடங்களிலேயே 2 லட்சத்திற்கும் அதிகமான ஆர்டர்களைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் கதவு கைப்பிடிகள் தானாகவே உள்ளே சென்று மறையும் (Fully Recessed Door Handles) வசதி கொண்டது. இதில் LiDAR மற்றும் AI கேமராக்கள் உள்ளன. இது தானாகவே இயங்கும் (Autonomous Driving) வசதிகொண்டது.

2. ராயல் என்ஃபீல்ட் பியர் 650.!

ராயல் என்ஃபீல்ட் பியர் 650
ராயல் என்ஃபீல்ட் பியர் 650x

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் புதிய 'ஸ்க்ராம்ப்ளர்' (Scrambler) ரக பைக்கான Bear 650 விற்பனைக்கு வந்தது. இதில் பழைய மாடல்கள் போல இரண்டு சைலன்சர்கள் கிடையாது. எடையைக் குறைக்க 2-into-1 சிங்கிள் எக்ஸாஸ்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் வேகமாகச் செல்லவும், அதே சமயம் ஆஃப்-ரோடு சாகசங்கள் செய்யவும் விரும்புபவர்களுக்கு, ராயல் என்ஃபீல்ட் பியர் 650 ஒரு அட்டகாசமான தேர்வாக அமைந்தது.

3. கவனம் ஈர்த்த மஹிந்திரா XEV 9e புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி.!

மஹிந்திரா XEV 9e
மஹிந்திரா XEV 9ePt web

மகிந்திரா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் எஸ்யூவியான Mahindra XEV 9e 2025இல் பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 542 கி. மீ வரை செல்லும் வகையில் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு "Coupe" மாடல் என்பதால், காரின் பின்புறம் சரிவாக (Sloping roofline) மிகவும் ஸ்டைலாக இருக்கும்.

4. டெஸ்லா ரோபோடாக்ஸி.,

Tesla Robotax
Tesla RobotaxTeslaPodcast

எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் உருவாக்கியுள்ள Tesla Robotaxi, ஓட்டுநர் இல்லாமல் முழுமையாகத் தானாகவே இயங்கும் ஒரு நவீன மின்சார கார் ஆகும். இந்த காரில் ஸ்டீயரிங் வீல் (Steering wheel) அல்லது பெடல்கள் (Pedals) கிடையாது. முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கேமராக்கள் மற்றும் AI மட்டுமே கொண்டு இது பாதையைக் கண்டறியும். பட்டாம்பூச்சி சிறகுகள் (Butterfly wings) போல மேல்நோக்கித் திறக்கும் கதவுகள் இதற்கொரு விசேஷ தோற்றத்தைத் தருகின்றன.

5. மீண்டும் வந்த டாடா சியாரா.!

Tata Sierra
Tata SierraPt web

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய டாடா சியாரா (Tata Sierra) எஸ்யூவி, நவம்பர் 25, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் ஆரம்ப விலை ரூ.11.49 லட்சம் முதல் அதிகபட்சமாக ₹21.29 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழைய சியாராவின் கம்பீரமான தோற்றத்தையும், இன்றைய காலத்திற்குத் தேவையான உயர்தர தொழில்நுட்பத்தையும் இணைத்து டாடா நிறுவனம் இந்த காரை மீண்டும் களமிறக்கியுள்ளது.

6. யுனிட்ரீ R1 ரோபோ

யுனிட்ரீ R1 ரோபோ
யுனிட்ரீ R1 ரோபோPt web

unitree R1 என்பது ஜூலை 2025இல் அறிமுகப்படுத்தப்பட்ட, மிகக் குறைந்த எடையும், அதிக சுறுசுறுப்பும்கொண்ட ஒரு மனித உருவ (Humanoid) ரோபோ ஆகும். இந்திய மதிப்பில் ரூ.5 லட்சம் முதல் தொடங்குகிறது. மற்ற மனித உருவ ரோபோக்களுடன் ஒப்பிடும்போது இது விலை குறைவானது. செயற்கை நுண்ணறிவு வசதி உள்ளது. இது நாம் பேசுவதைப் புரிந்துகொண்டு பதில் அளிக்கும் மற்றும் கேமரா மூலம் பார்ப்பவற்றை அடையாளம் காணும் திறன்கொண்டது.

7. லோட்டஸ் ரிங்.,

லோட்டஸ் ரிங்
லோட்டஸ் ரிங்x

Lotus Ring என்பது ஒரு சாதாரண ஸ்மார்ட் ரிங் (Smart Ring) போல அல்லாமல், அணிந்துகொள்ளக்கூடிய ரிமோட் கண்ட்ரோல் போலச் செயல்படும் ஒரு நவீன கருவியாகும். இது 'இன்ஃப்ராரெட்' (Infrared) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது (டிவி ரிமோட் போல). எனவே இதற்கு வைஃபை, புளூடூத் அல்லது மொபைல் ஆப் எதுவுமே தேவையில்லை. ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 4 முதல் 6 மாதங்கள் வரை இது உழைக்கும்.

8. இந்தியா வந்தது ஸ்டார்லிங்க்!

Starlink
StarlinkPt web

எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவை இந்தியாவில் அறிமுகமானது. விண்வெளியில் உள்ள செயற்கைக்கோள்கள் மூலம் நேரடியாக இணையம் வழங்கப்படுவதால், 25 Mbps முதல் 225 Mbps வரை வேகம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு முறை செலுத்த வேண்டிய ஹார்டுவேர் கட்டணம் (Dish & Router)) ரூ.34,000ஆகவும், மாதாந்திர சந்தா சுமார் ரூ.8,600ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

9. கண்ணாடியில் ஒரு செல்போன்.!

Ray-Ban Meta AI Glasses
Ray-Ban Meta AI GlassesPt web

Ray-Ban Meta AI Glasses என்பது சாதாரண சன்கிளாஸ் போலத் தெரிந்தாலும், அதற்குள் கேமரா, ஸ்பீக்கர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) எனப் பல வசதிகள் உள்ளன. 2025இல் அறிமுகமான இதன் மேம்பட்ட மாடலில், வலது பக்க லென்ஸில் ஒரு மினி டிஸ்ப்ளே கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் செல்போன் செயலிகள் அனைத்தும் உங்கள் கண்ணாடியிலேயே தெரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 4 முதல் 6 மணிநேரம் வரை இயங்கும்.

10. சாம்சங்கின் மூன்று மடிப்பு போன்... 

Samsung tri foldable mobile phone
Samsung tri foldable mobile phonePt web

2025ஆம் ஆண்டில் மடிக்கக்கூடிய (Foldable) ஸ்மார்ட்போன்கள் மக்கள் விரும்பும் முதன்மைத் தேர்வாக மாறியுள்ளன. 2025இல் ஃபோல்டபிள் போன்கள் அதிக வேகம், சிறந்த கேமரா மற்றும் மெலிதான டிசைனுடன் வந்துள்ளன. குறிப்பாக சாம்சங்கின் Tri- Fold (மூன்று மடிப்பு) போன் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. Tecno மற்றும் Realme போன்ற நிறுவனங்கள் மலிவு விலையில் (சுமார் ₹40,000 - ₹60,000) ஃபோல்டபிள் போன்களை அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com