2021 இல் ‘மேட் இன் இந்தியா’ ஐபோன்: 12 சீரிஸை அறிமுகப்படுத்த உள்ள ஆப்பிள் நிறுவனம்..?
அடுத்த வருடம் வரவிருக்கும் ஐபோன் 12 சீரிஸை இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிஸினஸ் ஸ்டாண்டர்டின் அறிக்கைப்படி, இந்தியாவில் ஐபோன் 12 அடுத்த ஆண்டில் விற்பனைக்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தைவான் நிறுவனம் 10,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் என எதிர்பார்க்கப்படுவதால், தயாரிப்புக்கான முதலீடு, ரூ.2,900 கோடிக்கு மேல் உள்ளது. 2020 அக்டோபருக்குள் உற்பத்தி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள நரசபுரா ஆலையில் உற்பத்தியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஏற்கனவே 1000 தொழிலாளர்கள் பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.
இது இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஆலை அல்ல. சமீபத்தில், சென்னையில் ஐபோன் 11, ஐபோன் எக்ஸ்ஆர் ஆகிய மாடல்களின் அசெம்ப்ளிங்கை ஆப்பிள் நிறுவனம் தொடங்கியது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஐபோன் எஸ்இ 2020இன் அசெம்ப்ளிங்கையும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால், இதன் விலை குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆப்பிள் நிறுவனம் விலையைக் குறைப்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை. இந்தியாவில் வளர்ந்துவரும் சீனா பொருட்கள் எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்த ஸ்மார்போனின் விலையை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.