தூத்துக்குடி - திருச்சி - கங்கைகொண்ட சோழபுரம் | பிரதமர் வருகையால் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு!
இரண்டுநாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி, இன்று மாலை விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமானநிலையத்தின் புதிய முனையத்தை திறந்துவைத்து, முடிந்ததிட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். அதோடு பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
இன்றிரவு, தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்து, பின்னர் கார்மூலம் திருச்சி ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள கோட்ரியாட் மாரியாட் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். பிரதமர் மோடி முதல் முறையாக திருச்சி நட்சத்திர விடுதியில் தங்குகிறார். முன்னதாக அவர் வந்த பொழுது பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதும் தங்கவில்லை.
நாளை காலை நட்சத்திர விடுதியில் இருந்து பிரதமர் புறப்பட்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை கண்டோன்மென்ட், மாநகராட்சி அலுவலகம், ஒத்தக்கடை , தலைமை தபால் நிலைய சிக்னல் கடந்து டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம், மத்திய சிறை பகுதி சாலை வழியாக திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார். திருச்சி மாநகராட்சி அலுவலகம் அருகே ஒத்தக்கடையில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் நின்று பிரதமரை காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பகுதியில் அதிமுக சார்பில் ஜெயலலிதா, இபிஎஸ் படம் போடப்பட்டுள்ள பேனர்கள் வைத்து பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 11 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு, அரியலூர்மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தித்தில் நடைபெறும் ராஜேந்திரசோழனின் பிறந்தநாளான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து பிரகதீஸ்வரர்கோவிலில் சாமிதரிசனமும் செய்துவிட்டு, மீண்டும் திருச்சிக்கு வந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார்.
இன்று இரவு பிரதமர் தங்கும் நட்சத்திர விடுதி சாலை முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அப்பகுதியில் பொதுமக்கள் சுலபமாக பயணிக்க முடியாது. காவல்துறை சோதனைக்கு பிறகு அச்சாலையில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகர் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். திருச்சி விமான நிலையத்தில் இருந்து நட்சத்திர விடுதி வரை பிரதமர் செல்லும் சாலையில் மத்திய அரசின் சிறப்பு பாதுகாப்பு குழுவான எஸ்பிஜி குழுவினர், மத்திய தொழிலக பாதுகாப்பு படை போலீசார் மற்றும் தமிழக போலீசார் இணைந்து ஒத்திகை நிகழ்ச்சியிணை நடத்தினர். அதேநேரம் 27 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்கவும் மாவட்ட ஆட்சியர் சரவணன் தடை விதித்து மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
இந்நிலையில் திருச்சி சர்வதேச விமான நிலையம் எஸ்பிஜி கட்டுப்பாட்டில் வந்து 4 ராணுவ ஹெலிகாப்டர்கள் விமான நிலையத்தில் தரையிறக்கபட்டுள்ளது. இன்று கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டு சோதனை ஓட்டம் நிகழ்த்தப்பட உள்ளது. விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து பயணிகளும் முழு சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மோப்ப நாய்கள் ,வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விமான நிலையம் முழுவதையும் சோதனை செய்து வருகின்றனர்.