'சாப்பாட்டு ராமன்' யூடியூபர் பொற்செழியன் கைது செய்யப்பட்டு விடுவிப்பு
முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்தது தொடர்பான புகாரில் 'சாப்பாட்டு ராமன்' யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்த பொற்செழியன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அதிக உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிட்டு பிரபலமானவர் 'சாப்பாட்டு ராமன்' யுடியூப் சேனலை நடத்தும் பொற்செழியன். பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் இவரது யுடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவர் சின்னசேலம் பகுதியை அடுத்த கூகையூர் பகுதியில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக, மாற்றுவழி மருத்துவம் படித்ததற்கான சான்றுடன் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், இவர் ஆங்கில மருந்துகளை பரிந்துரைப்பதாக ஆட்சியருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரது கிளினிக்கில் சோதனை நடத்தினர். அப்போது, கொரோனா உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு, ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்தது தெரியவந்ததோடு, அங்கிருந்து ஆங்கில மருந்துகளும் கைப்பற்றப்பட்டன. முறையான அங்கீகாரம் இல்லாமல் ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்த அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், பொற்செழியனை கைது செய்து நீதிபதி முன் நிறுத்தினர்.
இதனை அடுத்து வயது மூப்பு, கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர் போன்றவற்றை கருத்தில் கொண்டு பிணையில் விடுவிக்க அவரது வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்ற நீதிபதி பொற்செழியனை பிணையில் விடுவித்தார்.
கொரோனாவுக்கு சித்த மருத்துவம் நல்லது எனக் கூறி வந்த பொற்செழியன், மறைமுகமாக ஆங்கில மருந்துகளை பரிந்துரைத்து வந்தது அவரது யூடியூப் சேனல் சப்ஸ்கிரைபர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.