எல்லை மீறிய பிரபல Youtuber? மார்கண்டேயன் மகன் பலி ஆடா? பின்னணி என்ன?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விளாத்திக்குளம் எம்.எல்.ஏ மார்கண்டேயன், போலீசாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட அவர், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். எம்எல்ஏ மார்கண்டேயன் சிறையில் இருந்தபோது, செய்தியாளர்களை சந்தித்த அவரது மகன், முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்திருந்தார். அப்போது, அவர் பேசிய விதத்தை பகடி செய்யும் விதமாக, Youtube ஒன்றில் வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. திமுகவினரின் கடுமையான எதிர்ப்புகளுக்கு பிறகு, அந்த குறிப்பிட்ட காட்சியை நீக்கிய யூடியூப் குழுவினர், அதற்காக தங்களது வருத்தங்களையும் பதிவு செய்திருந்தனர். இந்த சர்ச்சையின் சூடே இன்னும் குறையாத சூழலில், பிரபல Youtuber ஒருவர் தனது வீடியோ ஒன்றில், மார்கண்டேயனின் பேச்சு, பாடி லாங்குவேஜ் குறித்து, மீண்டும் கேலி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே சர்ச்சையான ஒரு விஷயத்தை மீண்டும் கையில் எடுத்துள்ள அந்த யூடியூபர், ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காக, பிரச்னையே வந்தாலும் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்திருக்கிறாரா என்ற கேள்வியை இது எழுப்புகிறது. அதே வீடியோவில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஆகியோரின் செயல்பாடுகளை, மறைமுகமாக விமர்சித்திருந்தாலும், மார்கண்டேயன் மகன் தொடர்பான காட்சி, தனிநபர் தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது.
அரசியல் ரீதியிலான செயல்பாடுகளை பகடி செய்வது, நகைச்சுவையான முறையில் விமர்சித்தல், அவர்களது தவறுகளைச் சுட்டிக் காட்டுதல் என்பது ஆரோக்கியமானது. ஆனால், வெறும் Views க்காக, இப்படியான செயலில் ஈடுபடுவது, வெறுப்புணர்வைத்தான் ஏற்படுத்தும் என்பதே நிதர்சனமான உண்மை.

