நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்!
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம்!

சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாக 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த ஜூலை 22-ம் தேதி ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது என யூடியூபில், தனியார் சேனலில் தெரிவித்தது தொடர்பாக சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இது தொடர்பாக, அவர் மீது ஏன் குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? என, சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது.

இன்று இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி சிறப்பு அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி, தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். அப்போது "இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் வரம்பிற்கு உட்பட்டதல்ல. ஆகவே இந்த வழக்கை மதுரைக்கிளை விசாரிக்க இயலாது.

நீதித்துறையில் இடஒதுக்கீடு என்பது முறையாக பின்பற்றப்படவில்லை. பிராமணர்கள் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 3% இருந்தாலும், நீதித்துறையில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால் பெருமளவில் பட்டியல் இனத்தவர்கள் இருந்தாலும், நீதித்துறையில் அவர்களின் பங்கு மிகக்குறைவாகவே உள்ளது. அருந்ததியர் இனத்தில் ஒரு நீதிபதி கூட இல்லை. இதனால், பட்டியலின நீதிபதிகள் வழக்குகளைக் கையாள்கையில், அவர்களின் முழு பங்கையும் அளிக்க இயலவில்லை.

பிற நீதிபதிகளின் விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்பாக பல நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அமைப்புகள் அளித்த தரவுகளைக் குறிப்பிட்டே இந்த கருத்தை பதிவு செய்துள்ளேன். எனது சில கருத்துக்களை தனியே பார்க்கும் போது அது மிகுந்த பிரச்சனையை ஏற்படுத்தும் வகையிலானதாக தோன்றலாம். ஆனால், அதன் பின்புலத்தோடு உண்மை விளங்கும். நீதித்துறையின் மதிப்பை குறைப்பதோ, களங்கப்படுத்துவதோ எனது நோக்கமல்ல. நீதிமன்ற உத்தரவுகளை விமர்சிக்க உரிமை உண்டு. பேச்சுரிமை அதற்கான உரிமையை வழங்குகிறது" என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கில் உத்தரவு பிறப்பிப்பதற்காக சிறிது நேரம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி அமர்வு, சவுக்கு சங்கருக்கு 6 மாத கால சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டனர். மேலும், இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு காரணமான பதிவுகளை சமூக வலைதளங்களிலிருந்து நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய தொழில்நுட்பத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து Facebook, google, twitter சமூக வலைதளங்கள் பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். தற்போது சவுக்கு சங்கர், நீதிமன்றத்தில் உள்ள நிலையில், உத்தரவு நகல் உடனே வழங்கப்படும். அதைத்தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்படுவார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com