ஈரோடு: பிரபல இன்ஸ்டா பிரபலம் ராகுல், வாகன விபத்தில் மரணம்!
செய்தியாளர்: சுப்ரமணியம்
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். டான்ஸ் மாஸ்டரான இவர், Rahul Tikki என்ற யூட்யூப் சேனலை நடத்தி வந்திருக்கிறார். இன்ஸ்டாவிலும் இவர் பிரபலம்.
இவருக்கும் கவுந்தப்பாடி நேரு நகரைச் சேர்ந்த வேலுமணி என்பவரது மகள் தேவி ஸ்ரீ என்பவருக்கும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு ராகுல் தனது மாமியார் வீட்டிற்கு இரு சக்கர வாகன மூலம் சென்றுள்ளார். கவுந்தப்பாடியில் உள்ள தனது மனைவியை அழைத்து வர அவர் அங்கு சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக கவுந்தப்பாடி அருகே சாலையில் தடுப்பின் மீது மோதி ராகுல் படுகாயம் அடைந்துள்ளார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த ராகுல், வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து அவரது உடல், மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உட்படுத்தப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.