ஹெல்மெட் பிரச்னையில் போலீஸுக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்
சென்னை அண்ணா சதுக்கம் அருகே தலைக்கவசம் அணியாமல் சென்ற இளைஞர், காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவையடுத்து காவல்துறையினர் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நேற்றிரவு காவல்துறை என ஸ்டிக்கர் ஒட்டிய வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல், பெண்ணுடன் வந்த இளைஞரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
அதனால், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் காவல் ஆய்வாளரின் மகனான தன்னை எப்படி வழிமறிக்கலாம் எனக்கூறி காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தலைக்கவசம் அணியாததால், அபராதம் செலுத்தும்படி காவல்துறையினர் கூறியதற்கு, அவர்களுடன் அந்த இளைஞர் வழக்கறிஞரான தன்னிடமே அபராதம் கேட்பதா எனக் காரசாரமாக சண்டையிட்டார்.
அந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் திருவள்ளூரில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வரும் மைனர்சாமி என்பவரது மகன் இளங்காமணி என்பது தெரியவந்துள்ளது. அவர், ஜூனியர் வழக்கறிஞராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், இளங்காமணி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காவல்துறையினர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.