திருத்தணி அருகே இளைஞர் ஒருவர் தற்கொலை - ‘டிக்டாக்’ விபரீதம்
திருத்தணி அருகே ‘டிக்டாக்’ விபரீதத்தால் இளைஞர் ஒருவர் தன் வாழ்க்கையே முடித்துக் கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
திருத்தணி அருகே கார்த்திகேயபுரம் கிராமம் அருகே ஏரிக்கரையின் ஒடையில், 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் இதனைப் பார்த்து திருத்தணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, இறந்த வாலிபர் அருகில் பூச்சி மருந்து பாட்டில் மற்றும் இரு சக்கர வாகனம் இருந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டபோது, இறந்த வாலிபர் திருத்தணி அடுத்த தாழவேடு கிராமத்தைச் சேர்ந்த கன்னியப்பன் மகன் வெங்கடராமன் என்று தெரியவந்தது. வெங்கடராமன் கடந்த பிப்.21-ம் தேதி தனது நண்பர் விஜி என்பவருடன் ஒன்றாக சேர்ந்து ‘டிக்டாக்’ வீடியோவில் தாழவேடு காலனி மக்களை அவதூறாக பேசியுள்ளார். இந்த வீடியோவை விஜி என்பவர் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். இதனால் காலனி மக்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, வெங்கடராமன், விஜி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், பிப்.22-ம் தேதி இரவு, விஜியை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு வெங்கடராமன் போலீசில் சரணடைந்தார். சமூக வலைத்தளத்தில் விஜி, வீடியோவை பதிவேற்றம் செய்ததால்தான் இவ்வளவு பிரச்னை என வெங்கடராமன் ஆத்திரத்தில் கொலை செய்ததும் தெரியவந்தது.
தற்போது வெங்கடராமன் மீது கொலை வழக்கு, ‘டிக்டாக்’ அவதுாறு வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனால் தனக்கு, அதிக ஆண்டுகள் தண்டனை கிடைக்கும் என்பதால் மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார் என விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
‘டிக்டாக்’ தவறாக பயன்படுத்தியதன் காரணமாக ஏற்பட்ட விபரீதத்தால் இளைஞர் தன் வாழ்வை முடித்துக் கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிவரும் காலங்களில் இளைஞர்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.