புகார் செய்த மனைவி.. மாமனார் வீட்டு வாசலில் இளைஞர் தற்கொலை..!
குடித்துவிட்டு தினமும் தகராறில் ஈடுபடுவதாக கணவன் மீது மனைவி காவல்துறையில் புகாரளித்ததையடுத்து, மாமனார் வீட்டு வாசலில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை அண்ணாசாலை ரசாஹைதர் தெருவைச் சேர்ந்தவர் முஸ்தாக் பாட்ஷா. இவரது மனைவி நவீஷா பானு. இருவருக்கும் திருமணம் ஆகி 9 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தை என மொத்தம் 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே முஸ்தாக் பாட்ஷா வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக அவரது மனைவி நவீஷா பானு அண்ணாசாலை மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 23-ம்தேதி புகார் கொடுத்தார். அதுமட்டுமில்லாமல் மனைவி பிரிந்து சென்று அண்ணாசாலை லத்துராம் தெருவில் உள்ள தந்தையுடன் வசித்து வந்தார்.
நேற்று மனைவியை பார்க்க முஸ்தாக் பாட்ஷா அவரது மாமனார் வீட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால் மனைவி கதவை திறக்கவில்லை. இதனால் மனமுடைந்த முஸ்தாக் மாமனார் வீட்டின் வாசலிலேயே கையில் வைத்திருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் முஸ்தாக் பாட்ஷாவை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 94 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். சம்பவம் குறித்து அண்ணாசாலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.