பாரம்பரியம் என்றுமே அழியாது.. தமிழர்களின் கலைகளை காக்கும் இளைஞர்கள்.!
தமிழர்களின் பாரம்பரிய கலைககளில் ஒன்றான சிலம்பாட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.
தமிழர்களையும் அவர்களின் பாரம்பரிய கலைகளையும் என்றுமே பிரிக்க முடியாது. ஆதி காலம் தொட்டே கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், வில்லுப்பாட்டு என ஏகப்பட்ட கலைகளை கற்றுத் தெரிந்தவர்கள் தமிழர்கள். இன்றும் தமிழர்களின் கலைகளுக்கு வெளிநாட்டிலும் கூட தனிப்பெருமை உண்டு. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிற்கு தடை வந்தபோது அதனை எதிர்த்து ஒட்டுமொத்த தமிழமே போராடியது உலகம் அறியும். அதில் வெற்றியும் கண்டது தமிழர்களுக்கு கிடைத்த மற்றொரு பெருமை. இருந்தாலும் நாகரிகங்கள் பெருகி வரும் இந்தக் காலத்தில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளை கற்க பலரும் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. கலைகளை கற்க நினைத்தாலும் கூட அதற்கான வாய்ப்பும் அமைவதில்லை என்று இஞைர்கள் சிலர் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான சிலம்பாட்டத்தை மீட்டெடுக்கும் முயற்சியும் மாங்காட்டை சேர்ந்த இஞைர்கள் சிலர் குழுவாக செயல்பட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காட்டில் அமைந்துள்ளது திரௌபதி மாரியம்மன் கோயில். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடத்தப்படும். அதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பாட்டமும் இடம்பெறும். அப்போது நடைபெற்ற சிலம்பாட்டத்தை கண்டு அதில் நாமும் பயிற்சி பெற வேண்டும் என எண்ணியுள்ளனர் அப்பகுதியை சேர்ந்த சரத்குமார் உள்ளிட்ட இளைஞர்கள். உடனே அந்தச் சிலம்பாட்டக் குழுத் தலைவரான வினோத்தை தொடர்பு கொண்டு ‘நாங்களும் சிலம்பம் கற்க ஆசைப்படுகிறோம். எங்களுக்கும் கற்றுக்கொடுங்கள்” என கேட்டிருக்கின்றனர். வினோத்தும் அந்த இளைஞர்களுக்கு சிலம்பத்தை கற்றுக் கொடுத்துள்ளார். பின்னர் சிலம்பத்தை கற்ற அந்தக் குழுவினர் தாம் கற்ற தமிழர்களின் பாரம்பரியத்தை மற்றவர்களும் கற்க வேண்டும் என்ற நோக்கில் ‘செந்தீ சிலம்பாட்டக் குழு” என்ற ஒன்றை உருவாக்கி மற்றவர்களுக்கு இலவசமாக சிலம்பம் கற்று கொடுத்து வருகின்றனர். தற்போது இவர்கள் குழுவில் 50-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் சிலம்பம் கற்று வருகின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் அவர்கள் இலவசமாக சிலம்பம் கற்று கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து அந்தக் குழுவை சேர்ந்த சரத்குமார் கூறும்போது “தமிழர்களின் பாரம்பரியத்தை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதில் எங்களுக்கு பெருமை உண்டு. இன்னும் எத்தனை பேர் வந்தாலும் நாங்கள் கற்றுக் கொடுப்போம். அதேபோல சிலம்பத்தில் இன்னும் பல விஷயங்களை மற்றவர்கள் சொல்லித் தந்தாலும் நாங்கள் கற்றுக் கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.