பைக்கில் வந்தவர்களை லத்தியை வீசி தடுத்த போலீசார் - விபத்தில் சிக்கி இளைஞரின் கால் முறிவு
பொள்ளாச்சி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை லத்தியை வீசி போலீசார் தடுத்ததால் விபத்தில் சிக்கி இளைஞரின் கால் முறிந்தது.
கோவை குனியமுத்தூரை சேர்ந்த நகை கடை தொழிலாளிகள் சர்தார், சன்பர் மற்றும் அப்சல். இவர்கள் மூன்று பேரும் ஆழியார் அணையை சுற்றிப் பார்க்க இரு சக்கர வாகனத்தில் வந்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது தென் சங்கம்பாளையம் பகுதியில் கோட்டூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சம்பந்தம் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்த போலீஸ் ஒருவர் லத்தியை வீசியுள்ளார். லத்தி வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதில், தடுமாறிய இருசக்கரவாகனம் எதிரே வந்த சரக்கு லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் வாகனத்தில் வந்த மூன்று பேரில் ஒருவருக்கு கால் முறிந்தது. மற்ற இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த கிராம மக்கள் படுகாயமடைந்த சன்பர், அப்சல், சர்தார் ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் சம்பந்தம் இதுபோன்று வாகனங்களில் வருபவர்களை தரக்குறைவாக பேசுவதும் வாகன தணிக்கை என்ற பெயரில் பொதுமக்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபடுவதாகவும் கூறி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகனத் தணிக்கையில் ஈடுபடும்போது தலைக்கவசம் இல்லாமல் வருபவர்களை நிறுத்தி அபராதம் விதிப்பதை வரவேற்கிறோம். ஆனால் இதுபோன்று விபத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களை மிரட்டுவதும் காவல்துறை அல்லாத நபர்களை வைத்துக்கொண்டு வசூல் வேட்டையில் ஈடுபடுவதும் தொடர்கதையாக உள்ளதால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
தகவலறிந்து வந்த வால்பாறை டிஎஸ்பி விவேகானந்தன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் நீண்டநேரம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.